ஜெனிவா: சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ், அதன்பின் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களைத் தாக்கி வருகிறது. இந்த மாறுபாடுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா என, பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.
கிரேக்க எழுத்து வரிசையில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் கோவிட் வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதால், இந்த எழுத்துக்களுக்குப் பிறகும் பெயர்கள் தேவைப்படும் என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் கோவிட் தொழில்நுட்பக்குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், 'கோவிட் வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. அதனால், மாறுபாடுகளை அடையாளப்படுத்த நட்சத்திரக் கூட்டங்களின் பெயர் சூட்ட பரிசீலிக்க உள்ளோம். கிரேக்க கடவுள்கள் அல்லது பெண் தெய்வங்களின் பெயர்களையும் சூட்ட ஆலோசித்து வருகிறோம்' என்றார்.
கோவிட் வைரசின் டெல்டா மாறுபாடு தற்போது பல்வேறு நாடுகளை உலுக்கி வரும் நிலையில், எண்ணிலடங்கா மாறுபாடுகள் வருவது போல் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE