புதுடில்லி: 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தவிர மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள, 9 மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ரமணா கூறுகையில், 'இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். நாங்கள் (நீதிபதிகள்) விவாதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது, அங்கு தான் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். வெளியில் விவாதிக்க கூடாது. இதுகுறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது. அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் வரம்பை மீறக்கூடாது' என்றார்.

கடந்த 5ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, 'ஊடகங்களில் வந்த பெகாசஸ் தொடர்பான செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிரமானது. ஆனால் இவ்வழக்கில் அத்தனையும் ஊடகங்கள் சொல்வதாகத்தான் உள்ளதே தவிர, வேறு எந்த ஆவணமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களும் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர, வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை' எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE