கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அவரது ஆதரவாளர்களுக்கு காலையில் இருந்து உணவுப்பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு விருந்துளிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வசிக்கும் வேலுமணி வீடு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வேலுமணி மனைவியின் சகோதரர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் சோதனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து, சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் அதிகளவு குவிந்தனர். வீட்டின் முன் கூட்டம் கூடியதால், கலைந்து செல்லுமாறு போலீஸ் வலியுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்து போலீசுடன் வாக்குவாதம் மற்றும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காலை முதல் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. காலையில் இட்லி, பொங்கல், டீ, காபி, வாட்டர் பாட்டில், குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டது. அதன்பின்னர் முற்பகலில் ரோஸ் மில்க்-ம், மதியம் தக்காளி சாதமும் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த வந்த இடத்தில் மினி விருந்தே கிடைப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.