சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., மாளிகை என்ற பெயரை சூட்ட வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளின் தலைமை அலுவலகத்திற்கு, பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை அலுலகத்திற்கு சத்தியமூர்த்திபவன், பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு கமலாலயம், தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு அறிவாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு மட்டும் எந்த பெயரும் சூட்டாமல் இருக்கிறது. அ.தி.மு.க., தலைமை அலுவலகம், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ளது. எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியின் பெயரில் இந்த சொத்து இருந்தது. அதை எம்.ஜி.ஆர்., அதிமுக கட்சி அலுவலகத்திற்கு பெற்றுக் கொண்டார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., மாளிகை என்ற பெயரை சூட்ட வேண்டும் என, அக்கட்சியின் அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரன் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் பெயரை கட்சி அலுவலகத்தின் உள் அரங்கத்திற்கு சூட்ட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவடடம், முத்தியால்பேட்டையை சேர்ந்த எம்.ஜி.ஆர்., பக்தருமான ஆர்.வி.ரஞ்சித்குமார், சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.