அ.தி.மு.க.,விலும், அரசியலிலும், வேலுமணி வளர்ந்த கதை, சற்று வித்தியாசமானது. இவரின் தந்தை பழனிசாமி, சாதாரண மில் தொழிலாளி. அ.தி.மு.க., இன்ஜினியரிங் தொழிற்சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவர். தாயார் சத்துணவு அமைப்பாளர்; அ.தி.மு.க., சார்பில், குனியமுத்துார் பேரூராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர்.
தீராத ஆசை
வேலுமணிக்கு, சினிமாவில் சேர்ந்து பெரிய ஆளாக வேண்டுமென்பது தீராத ஆசை. அதற்காக, பல முறை சென்னை சென்று முட்டி மோதினார்; கதையாகவில்லை.
ஊருக்கு வந்த அவரை, அரசியலின் பக்கம் திருப்பி விட்டார் பழனிசாமி. சின்னச் சின்ன கான்ட்ராக்ட் வேலைகளையும் செய்யத் துவங்கினார். 1996 தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்த போதும், தி.மு.க.,வினருடன் நட்பு வைத்து, கான்ட்ராக்ட் எடுத்து கலக்கினார். அவர் வைத்திருந்த, கிரிக்கெட் டீம் இளைஞர்கள், 100 பேரை ஒயிட் அண்ட் ஒயிட் சீருடையில் ஜெயலலிதா படம் போட்ட பனியனுடன் நிற்க வைத்து, ஜெயலலிதா கோவை வந்த போது வரவேற்று அசத்தினார். கடைக்கண்ணில் பார்த்த ஜெயலலிதா, கட்சியில் பதவி தந்தார்.
இவருக்கு, 2001 உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைத்தது; குனியமுத்துார் நகராட்சி தலைவரானார். அடுத்து எம்.எல்.ஏ., பதவியை குறி வைத்தார். பேரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். ஆனால், பட்டியலில் கே.பி.ராஜு பெயர் இருந்தது. ராஜு மீது சில கிரிமினல் வழக்குகள் இருந்ததால், திடீரென வேட்பாளரான வேலுமணி, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். மீண்டும், 2001 தேர்தலில், சசிகலாவின் உறவினர் ராவணனை பிடித்து, தொண்டாமுத்துார் தொகுதியில் சீட் வாங்கிப் போட்டியிட்டு வென்றார்.
அமைச்சர், மாவட்டச் செயலர் பதவி கிடைத்தது. சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை என்ற புதிய துறை ஒதுக்கப்பட்டது. சில மாதங்களில் வருவாய்த்துறை அமைச்சரானார். அப்போதிருந்த கலெக்டருக்கும், இவருக்கும் ஏற்பட்ட மோதலில், முதலில் கலெக்டர் மாற்றப்பட்டார்.
பதவி பறிப்பு
அடுத்த சில நாட்களிலேயே, அவர் மீண்டும் கோவை கலெக்டராக நியமிக்கப்பட்டார். மாறாக, வேலுமணியின் அமைச்சர் பதவியும், மாவட்ட செயலர் பதவியும் பறிக்கப்பட்டது.இரண்டே ஆண்டுகளில், மீண்டும் அமைச்சர், மாவட்ட செயலனார் வேலுமணி. உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டது. ஜெயலலிதா இறந்த பின், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பதில் வேலுமணி காட்டிய துணிச்சலும், செய்த முயற்சிகளும் அவரை தனித்துவமான தலைவராகக் காட்டின. சமுதாய ரீதியாகவும்
பழனிசாமி, தங்கமணி, வேலுமணி மூவருக்கும் இடையில் இருந்த பிணைப்பு, வேலுமணியின் அதிகாரத்தை கட்சியிலும், ஆட்சியிலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்தது. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியதில் அவரது பங்களிப்பு பெரிதாக இருந்ததால், அவரை எதிர்ப்பதற்கு சீனியர்களே தயாராக இல்லை. தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின், வேலுமணியை கடுமையாக விமர்சித்தார். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் சிறையில் தள்ளுவோம்' என்றார். எதிர்த்து சவால் விட்டார் வேலுமணி. அவர் சொன்னபடியே, 10 தொகுதியிலும் வென்று காட்டினார். ஸ்டாலின் சொன்னபடி, இப்போது லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்து உள்ளது.
ரெய்டில் எடுத்தது என்ன?
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று நடத்திய ரெய்டுகளில் என்னென்ன எடுக்கப்பட்டது என்று, துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, உறவினர்கள், நண்பர்கள், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகள், நிறுவன அலுவலகங்கள் என மொத்தம் 60 இடங்களில், அதாவது, கோவையில், 42; சென்னையில், 16; காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஓரிடத்தில் சோதனை நடத்தப்பட்டது.சந்தேகத்துக்கு இடமான தொழில் நிறுவன வளாகங்களிலும், சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனைகளில், 13 லட்சத்து, 8,500 ரூபாய் ரொக்கம், நிலப்பத்திரங்கள், தொழில் நிறுவனங்களின் வர்த்தக பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள டெபாசிட் ஆவணம். மாநகராட்சிகளின் அலுவலக கோப்புகள், எலக்ட்ரானிக் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE