சென்னை: தனி பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடப்பதால், பகலில் மட்டுமின்றி, வேளாண் துறை அலுவலகம், இரவிலும் இயங்கி வருகிறது.
வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் குறைந்த நிதி ஒதுக்கப்படுவதாக, குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய, பல ஆண்டுகளாகவே விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என,சட்டசபை தேர்தலில்வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி, வரும், 14ம் தேதி வேளாண் துறைக்கு சட்டசபையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படஉள்ளது. இதற்காக, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர்அண்ணாதுரை உள்ளிட்டோர், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, விவசாயிகளிடம் கருத்துகேட்டனர்.

இறுதியாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், சென்னையில் கருத்து கேட்பு கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதையடுத்து, பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்களை இறுதி செய்யும் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.
பட்ஜெட் தாக்கலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை இயக்குனர் அலுவலகங்கள், பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் இயங்கி வருகின்றன. அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு, இன்று அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என, தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE