சென்னை: 'காகிதக்கூழ் மற்றும் களி மண்ணால், விநாயகர் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது' என, உத்தரவிட கோரிய வழக்கில் விளக்கம் அளிக்க, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முருகன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காகிதக்கூழ் மற்றும் களி மண் போன்ற பொருட்களை பயன்படுத்தி, விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். சில ஆண்டுகளாக, முன்னறிவிப்பு இல்லாமலும், சட்ட விதிகளை பின்பற்றாமலும், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள், எங்கள் தொழிலுக்கு இடையூறு செய்து, 'சீல்' வைக்கின்றனர்.

சில இடங்களில், சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டும், மனிதாபிமானமற்ற முறையில், கலைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமல், விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலுக்கு, இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, ஒரு வாரத்தில் பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, 17ம் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.