சென்னை: கடந்த 10 ஆண்டுகளாககிடப்பில் போடப்பட்டு உள்ள, இயற்கை வேளாண் கொள்கையை, அரசு வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணுாட்ட சத்துக்களை, பல மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி, சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோன்ற ரசாயனங்களின் பாதிப்பு, உணவுப் பொருட்களிலும் கலந்து விடுகிறது. ரசாயன கலப்புள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமின்றி, ரசாயன கலப்பு உள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. ரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இயற்கை வேளாண் கொள்கை வகுக்கப்பட்டது. இதிலுள்ள சில அம்சங்களை, வேளாண் பல்கலை எதிர்த்ததால், வேளாண் கொள்கை வெளியிடப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இ.பி.எஸ்., ஆட்சியிலும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவுகளின், அதிகாரிகள் குழுவினர் இணைந்து, இயற்கை வேளாண் கொள்கையை தயாரித்தனர். இது, வேளாண் துறை செயலர் வாயிலாக, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, விரிவாக ஆய்வு செய்து, கொள்கையை வெளியிட திட்டமிடப்பட்டது. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கொள்கை வெளியிடப்பட வில்லை.
தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க., அரசு, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எனவே, அதற்கு வசதியாக, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, இயற்கை வேளாண் கொள்கையை, அரசு வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.