கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்த போது, அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் உட்பட 187 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதை அறிந்த அதிமுக.,வினர் பெருமளவில் திரண்டனர். தொண்டர்கள் சூழ்ந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
அதிமுக.,வினரை வர விடாமல் தடுக்க போலீசார் தடுப்பு அமைத்தனர். அவற்றை தூக்கி எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், செல்வராஜ், அம்மன் அர்ஜூனன், அருண்குமார், சிங்காநல்லூர் ஜெயராமன், கந்தசாமி ஆகியோரும் அங்கு வந்தனர். பிற்பகல் 1:30 மணிக்கு பிறகு எம்.எல்.ஏ.,க்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், வேலுமணி வீடு முன் ஆர்ப்பாட்டம் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு இடையூறு செய்ததாகவும், தொற்று நோய் தடுப்பு சட்டம், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் உட்பட 187 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அர்ஜுனன், செல்வராஜ், தாமோதரன், ஜெயராமன் , ஆனந்தன், கந்தசாமி, மகேந்திரன், அருண்குமார், அமுல் கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலுமணி கருத்து
இதனிடையே, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்பாக வேலுமணி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.