புதுடில்லி: லோக்சபாவில் 17வது நாளாக இன்றும் (ஆக.,11) எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி முதல் ஆக.,13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்து வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், 16 நாட்களாக இரு அவைகளும் முடங்கின. பார்லி., பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அமளிக்கு நடுவே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில், கூட்டத்தொடரின் 17வது நாளான இன்று (ஆக.,11) லோக்சபா துவங்கியவுடன், மீண்டும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அமளியால் தொடர்ந்து லோக்சபா முடங்கி வருவதால், அவையை 2 நாள்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE