சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும், முறையாக ஆகம விதிகளின்படி அவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்பது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்துகொண்டிருக்கிறது. கோசாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். இது குறித்தான குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளோம். இதுவரை 80 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் ஆய்வு செய்து, குடமுழுக்கு பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அதில், 75 பேர் 35 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதனால் 35 வயதுக்குட்பட்டவர்கள் முதலில் நியமனம் செய்யப்படும். அதில், முறையாக ஆகம விதிகளின்படி நியமிக்கப்பட உள்ளனர். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE