
தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட தன் காதல் மனைவி நிச்சயம் தன்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கையுடன் கடந்த இருபது வருடங்களாக ஊருக்கு வெளியே தனிமையில் காத்திருந்தவர்தான் நாகராஜ்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் மூலங்குடி கிராமத்தைச் சார்ந்த நஞ்சாயி என்பவரின் மகன்தான் நாகராஜ்.

அப்பா இறந்த பிறகு குடும்ப சுமையை பகிர்ந்து கொள்ள பிழைப்பு தேடி கோவை சென்று அங்குள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்தார்.
மளிகை பொருட்களை டெலிவரி செய்யப் போன இடத்தில் இளம் பெண்ணில் காதலில் விழுந்தார்,காதல் கண்ணியமாக வளர்ந்தது திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
யாரிடமும் சொல்லாமல் ஒரு நாள் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டனர்,திருமணம் முடிந்த பிறகு ஊரில் இருந்தால் ஆதரவு இருக்காது என்பதால் மாலையும் கழுத்துமாக மூலங்குடிக்கு வந்துவிட்டனர்.

அன்றைய தினம் நடக்கவிருந்த முதலிரவிற்கும் தேவையான பொருட்களை வாங்க நாகராஜ் பக்கத்தில் உள்ள டவுனுக்கு போயிருந்தார்.
மளிகை கடை பையனுக்கு காதல் வருவதையே ஏற்றுக் கொள்ளாத சமூகம் ,அவரது திருமணத்தையா ஏற்றுக் கொள்ளப் போகிறது. தகவலறிந்து பெண் வீட்டார் மாப்பிள்ளையை உண்டு இல்லை என்று செய்துவிட்டு பெண்ணை துாக்கிவர முடிவு செய்து மூலங்குடிக்கு படை பட்டாளத்துடன் வேனில் வந்தனர்.
வந்த இடத்தில் நாகராஜ் இல்லை பெண் மட்டும் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்தார். மணப்பெண் அழுவதையும் அலறுவதையும் பொருட்படுத்தாமல் வேனில் இழுத்துக் கொண்டு சென்றவர்கள்,‛ ஊர் பக்கம் வந்தால் உன் மகன் உயிரோடு திரும்ப மாட்டான் சொல்லிவை' என்று நாகராஜின் தாயாரிடம் எச்சரிக்கையும் செய்துவிட்டு சென்றனர்.
பூ உள்ளீட்ட பொருட்களுடன் வீட்டிற்கு வந்த நாகராஜ் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியில் மயங்கிவிழுந்தார் நீண்ட மயக்கத்திற்கு பிறகு எழுந்தவர் பழைய நாகராஜாக இல்லை மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
தாயார் உறவினர்கள் நண்பர்கள் என யார் பேசினாலும் சமாதானம் செய்தாலும் அதை கேட்கும் மனநிலையில் நாகராஜ் இல்லை ,அவளால என்னைய விட்டுட்டு இருக்கமுடியாது எப்படியும் ‛அவ வருவா..அவ வருவா' என்று பிதற்றியபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நாளாகியும் இந்த நிலை மாறாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு நாகராஜ் அழைத்துச் செல்லப்பட்டார் பணம்தான் கரைந்ததே தவிர நாகராஜ் கொஞ்சம் கூட குணமடையவில்லை.ஒரு கட்டத்தில் செலவழிக்க பணம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் தரப்படும் மாத்திரைகளை மட்டும் கொடுத்துவந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த நாகராஜ் திடீரென ஒரு நாள் கட்டிய லுங்கி சட்டையுடன் ஊருக்கு வெளியே உள்ள கண்மாய் கரையை ஒட்டியுள்ள உயரமான பாறைப்பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டார்.அவர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் ஊருக்குள் வரும் பாதை தெரியும் அந்தப்பாதை வழியாக எப்படியும் தன் காதல் மனைவி வருவார் என்ற வெறித்த பார்வையும் ‛அவ வருவா' என்ற பிதற்றலும் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்பட்டது.
தாயார் உள்பட யார் சொல்லியும் அவர் வீடு திரும்பவில்லை ஒரு நாள் இரண்டு நாள் போனால் வந்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள் ஆனால் இருபது வருடமாகிறது அவர் அங்கேயேதான் இருந்தார்.
நாகராஜ் தாயார் நஞ்சாயி நுாறு நாள் திட்டத்தில் வேலை செய்கிறார் அதில் வரும் வருமானத்தில் நாகராஜ்க்கு உணவு சமைத்துக் கொண்டு போய் கொடுத்து வருவார் சில நாள் சாப்பிடுவார் பல நாள் சாப்பாடு அப்படியே இருக்கும்
காதலுக்காக நாகராஜ் தன்னை இப்படி வருத்திக் கொள்வதை அறிந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் நாகராஜ்க்கு அவ்வப்போது வேண்டிய மாற்று உடைகள், முடிவெட்டுதல் போன்ற உதவிகளை செய்துவந்தனர்.அவர்களில் சிலர் இரவு நேரம் அந்தப்பக்கம் போன போது கூட துாங்காமல் பாதையையே வெறித்து பார்த்தபடி நாகராஜ் உட்கார்ந்து இருப்பதை பார்த்துள்ளனர்.
யார் எதைச் செய்தாலும் அதற்கு நாகராஜிடம் இருந்து ஏற்பும் இருக்காது எதிர்ப்பும் இருக்காது.யாரிடமும் பேச்சும் கிடையாது சிரிப்பும் கிடையாது காதலிக்கான காத்திருப்பு மட்டுமே அவர் வாழ்க்கையானது.
இந்த இருபது வருடங்களில் வெயிலில் காய்ந்து நாகராஜின் உடல் கருத்து சிறுத்துவிட்டது வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் வந்துவிட்டது.
எழுபது வயதான தன்னால் இனியும் தன் மகன் நாகராஜை கவனிக்கமுடியாது அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த போதுதான் அங்கிருந்த செய்தியாளர் மீனாட்சி சுந்தரம் கண்ணில்பட்டார்.
காதல் மனைவிக்காக ஒரு மனிதன் இருபது வருடமாக காத்திருக்கிறாரா? என அதிர்ச்சியும் கவலையும் அடைந்த அவர் உடனடியாக நஞ்சாயி அம்மா உதவியுடன் நாகராஜ் இருப்பிடம் தேடிச் சென்றார், அனைத்தும் உண்மை என்பதை அறிந்து மருத்துவ அதிகாரிகளின் உதவியை நாடினார்
உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள் நாகராஜை அந்த இடத்தைவிட்டு சிரமப்பட்டு அழைத்துவந்து சிகிச்சை அளித்தனர், ஆரம்பகட்ட சோதனையின் மூலம் அவர் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது.
தற்போது சிகிச்சை தொடர்கிறது
நாகராஜ் பூரண குணம் அடையவேண்டும் அவரது வயதான தாயார் நஞ்சாயிக்கு தேவையான உதவிகள் கிடைக்கவேண்டும் இதற்காக செய்தியாளர் மீனாட்சி சுந்தரம் தனது முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
நலமே விளையவேண்டும் நாகராஜ் பூரணகுணம் பெற வேண்டும்
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE