திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சக உயரதிகாரி ஒருவர் ஆங்கில செய்தி சேனலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக சுமார் 40 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்பு, அதாவது 20 ஆயிரத்துக்கும் மேல் கேரளாவில் பதிவாவது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
மத்திய அரசின், 'இன்சாகாக்' எனப்படும் மரபணு வரிசைமுறை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டம் கூட அனுமதி அளித்த காரணத்தால் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது என்றார். மேலும், தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது என்றார்.

இந்நிலையில் கேரள மாநில சுகாதார அதிகாரி ஒருவர் பகிர்ந்துக்கொண்ட தகவலில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேரிடம் கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் 14,974 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 2 வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ள 5,042 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அரிதான மறுதொற்றும் சில கேரள மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. தடுப்பூசி அல்லது ஏற்கனவே பாதித்த நோய் தொற்றால் உண்டாகியிருக்கும் எதிர்ப்பு சக்தியை மீறி வைரஸ் பாதிப்பது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE