உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எஸ்.சபரிநாதன், நிறுவனர் மற்றும் நிலைய முன்னாள் இயக்குனர், காரைக்கால் வானொலி நிலையம், ஆல் இந்தியா ரேடியோ, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒன்றிய அரசு' என்ற சொல் ஏற்படுத்திய சச்சரவும், சலசலப்பும், தமிழகத்தில் இன்னும் குறையவில்லை. தொலைநோக்கு திட்டங்கள் தீட்டுதல், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், வெறும் 'வார்த்தை' அரசியல் நடப்பது, தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.
அறுபது ஆண்டுகளுக்கு முன் நாளிதழ் மற்றும் வானொலி மட்டுமே ஊடகமாக இருந்தன. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வானொலி செயல்பட்டு வந்தது. மாநில அரசோ, தனியார் நிறுவனமோ வானொலி நிறுவனம் அமைக்க, அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. தமிழகத்தில், ஹிந்தி போராட்டம் ஏற்படும் வரை, எல்லாமே சுமுகமாகவே இருந்தது.
தமிழகத்தில் உள்ள வானொலி நிலையங்கள், 'ஆகாசவாணி' என்ற சொல்லை முன் மொழிந்து, அதன் பின் நிலையங்கள் அமைந்துள்ள நகரத்தின் பெயரை அறிவிப்பது வழக்கமாக இருந்தது.அனைத்து மாநிலங்களில் உள்ள வானொலி நிலையங்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.

இதற்கிடையில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழகத்தில் உச்சத்தை எட்டியது. எங்கும் ரணகளமாக இருந்தது. அறப்போர் என்பது அறவே ஒழிந்து, எங்கும் கிளர்ச்சியும், போராட்டமும் நடந்தன.ஹிந்தி எதிர்ப்பு அரசியல்வாதிகள், தமிழகத்தில் மேலும் கிளர்ச்சியை வலுப்படுத்த, வானொலியை ஒரு மொழி வெறியின் சின்னமாக மாற்றினர். 'ஹிந்தி ஆதிக்கத்தை வளர்க்கும் ஆகாசவாணி ஒழிக' என்ற குரல், காட்டுத்தீ போல எங்கும் பரவியது.
போராட்டத்தின் தாக்கம், பார்லிமென்ட் வரை எதிரொலித்து, கட்சிகளுக்கிடையே பகைமையை வளர்த்தது.ஒரு கட்டத்தில் தீ வைப்பு, ரயில் மறியல், ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு என, 'நிகழ்ச்சி நிரல்' நீண்டபடியே இருந்தது. இறுதியில் தமிழகத்தில் உள்ள வானொலி நிலையங்கள், ஹிந்தி சொல்லான 'ஆகாசவாணி' என அறிவிக்காமல், அதற்கு பதிலாக, 'ஆல் இந்தியா ரேடியோ' என்று கூறலாம் என உடன்பாடாயிற்று.
பெருத்த சேதங்களுக்கு பின், 'ஆகாசவாணி' என்ற சொல்லால் ஏற்பட்ட அரசியல் நாடகம் முற்றுப்பெற்றது. நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்க, 'வார்த்தை'யை முன்னிறுத்தி அரசியல் செய்வது என்பது தமிழகத்தின் தலையெழுத்து! தற்போது கிளம்பப்பட்டிருக்கும் 'ஒன்றிய அரசு' எனும் சொல், தமிழகத்தை என்னென்ன செய்யுமோ...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE