வன விலங்குகள் உயிரிழக்கும் அவலம்! நிரந்தர காடு அமைக்க நடவடிக்கை தேவை| Dinamalar

தமிழ்நாடு

வன விலங்குகள் உயிரிழக்கும் அவலம்! நிரந்தர காடு அமைக்க நடவடிக்கை தேவை

Added : ஆக 12, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவுக்காக அலையும் வனவிலங்குகள், விளைநில கிணற்றில் விழுந்தும், வாகனங்கள் மோதியும் இறப்பது தொடர்கதையாக உள்ளது. வன விலங்குகளுக்கென நிரந்தர காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மிக பெரிய அளவிலான வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவுக்காக அலையும் வனவிலங்குகள், விளைநில கிணற்றில் விழுந்தும், வாகனங்கள் மோதியும் இறப்பது தொடர்கதையாக உள்ளது. வன விலங்குகளுக்கென நிரந்தர காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மிக பெரிய அளவிலான வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகள் காப்புக்காடுகளாக இருந்தன.இங்கு மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில், பாம்பு, உடும்பு, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் இருந்தன. விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியினுள் பழ மரங்கள் வளர்க்கப்பட்டு, தண்ணீருக்காக குட்டைகள் வெட்டப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காப்புக்காடு முழுதும், வனத்தோட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.வனத்தோட்ட கழகத்தினர், வனப்பகுதியில் இருந்த பழ மரங்கள், குட்டைகளை அழித்து யூகலிப்டஸ், சந்தனம் உள்ளிட்ட மரங்களை வியாபார நோக்கத்தில் வளர்க்கின்றனர்.மரங்கள் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து, தொழிற்சாலைக்கு அனுப்புவதன் மூலம் கனிசமான வருவாய் கிடைக்கிறது. மாவட்டத்தில் 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதனால், அங்கு வசிக்கும் வனவிலங்குகளின் உணவு தேவை கேள்விக்குறியாகி உள்ளது.

காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காக, அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதமாக்குகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.வன விலங்குகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தல், பயிரில் குருணை வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகின்றனர்.வனப்பகுதியை விட்டு வெளியே செல்லும் விலங்குகள், மின் வேலியில் சிக்குதல், கிணற்றில் விழுதல், நாய் கடித்தல், வாகனங்களில் சிக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறப்பது தொடர்கதையாக உள்ளது.

குரங்குகள் சாலையோரங்களிலும், அருகில் உள்ள கிராமப் புறங்களிலும் சுற்றித் திரிவதுடன் அப்பகுதி மக்களை அச்சுறுத்துகின்றன. மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சென்று விட்டன.இதுதவிர, காட்டுப்பகுதியில் சுற்றி திரியும் மான், காட்டுபன்றி, மயில், முயல் உள்ளிட்ட விலங்குகளை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாடுகின்றனர். இதற்காக, உரிமம் இல்லாத துப்பாக்கிகள் வனப்பகுதியினுள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வனவிலங்குகளின் எண்ணிக்கையில் தற்போது 50 சதவீத விலங்குகள் கூட இல்லை. குறிப்பாக மான்கள் அதிகளவு அழிந்து விட்டன.வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, வனவிலங்குகளின் நலன் கருதி வனப்பகுதியின் மொத்த பரப்பளவில், வன விலங்குகள் வாழத் தகுந்த இடத்தை தேர்வு செய்து, 15 சதவீத பரப்பளவை ஒதுக்கி மனித நடமாட்டமில்லாத, நிரந்தர காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆண்டுதோறும் கள்ளக்குறிச்சி மாவட்ட வனப்பகுதியில் உள்ள விலங்குகளை கணக்கெடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X