தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளில், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியும் ஒன்று. வேறு வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை அவசரமாக திருப்பிய பலர், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்தனர்.
இப்போது தேர்தலும் முடிந்து, ஆட்சியும் அமைத்தாயிற்று. எப்போது நகைக்கடன் தள்ளுபடி செய்வார்கள் என்று, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள், அன்றாடம் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது.
'மக்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு' என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் சூழலில், எப்படியும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; அதே சமயம், இத்திட்டத்தின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளிகள் மட்டுமே, இடம் பெற வேண்டும்; அரசுக்கு நிதிச்சுமை ஏற்படக்கூடாது என்பதில், தமிழக அரசு கவனமாக இருக்கிறது. அதற்காக, அரசு புதிய விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் கூட்டுறவுத்துறைக்கு விதித்துள்ளது.
இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகைக்கடன் பெற்ற கடனாளிகள், உண்மையாகவே ஏழைகளாக இருக்க வேண்டும். அவர்கள் பெயரில் கார் இருக்கக்கூடாது. கடன் பெற்றவர் அண்ணன், தம்பி, மகன் இப்படி எந்த உறவுகளும் அரசுப்பணியிலோ, அரசு சார்பு அமைப்புகளிலோ, அரசு பென்ஷன்தாரராகவோ இருக்கக்கூடாது.நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, நகை கடனில் தள்ளுபடி இல்லை.
விவசாயக்கூலிகளுக்கு மட்டுமே கிடைக்கும். கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்கள் மற்றும் பணியாளர்கள் பெயரில் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.மத்திய அரசுப்பணி, வருமானவரி செலுத்துவோருக்கு தள்ளுபடி இல்லை. இப்படி ஏராளமான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும், அரசு கூட்டுறவுத்துறைக்கு விதித்துள்ளது.
இதனால், நகைக்கடன் தள்ளுபடி அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதில் மேலும் சில விதிமுறைகளையும், நிபந்தனைகளையும், இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.ஒவ்வொரு வங்கிக்கும், குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில், பயனாளிகள் பட்டியல் தயார் செய்யவும், கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற் போல், பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை துவக்கியுள்ளனர். பயனாளிகளின் விண்ணப்பங்களை பார்வையிட்டும், அவர்களது மொபைல் போனில் விசாரணை மேற்கொண்டும், ஆவணங்களை சரிபார்த்தும் பட்டியல் தயாரிக்கின்றனர்.
இதற்காக, கூடுதல் பணியாளர்கள் வெவ்வேறு பணிகளிலிருந்து, இப்பணிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, கோவை மண்டல கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பார்த்திபன் கூறுகையில், ''நீங்கள் கூறுவது உண்மைதான். இதற்கான பணிகள், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலுள்ள, துணை பதிவாளர் தலைமையில் நடந்து வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE