புதுடில்லி: பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பங்கு விலக்கல் நடவடிக்கை, கொரோனா பாதிப்புகளை கடந்து மீண்டும் தொடர்வதாக, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார்.
'ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், பவன் ஹான்ஸ், பி.இ.எம்.எல்., நீலாஜல் இஸ்பத் நிகாம்' உள்ளிட்ட நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி, மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: கொரோனா எங்களை மிகவும் பாதித்துவிட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மீண்டும் துவங்கி இருக்கின்றன.ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்க, ஏலதாரர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மிகவும் கவனிக்கப்பட்டு வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இந்த நிதியாண்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.
நடப்பு நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயை, பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.நாங்கள் ஒரு நிறுவனத்தை தனியார்மயமாக்க இருப்பதாக அறிவித்த உடன், அதன் பங்கு விலை உடனடியாக அதிகரித்து விடுகிறது. இதற்கு அர்த்தம், இந்நிறுவன சந்தை மதிப்புகள், தனியார் கைகளில் அதிகம் உள்ளன என்பது தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE