சென்னை: ''முன்னாள் அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து, ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும்,'' என, பால் வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின், இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, வளசரவாக்கத்தில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளியோருக்கு, 5 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது.இந்த நிகழ்ச்சியில், பால் வளத்துறை அமைச்சர் நாசர், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நலத் திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் நாசர் அளித்த பேட்டி: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, வெள்ளை அறிக்கை வெளியிடுமாறுஅறிவுறுத்தினோம். ஆனால், அதை, அ.தி.மு.க., அரசு மறுத்தது. தற்போது, வெளிப்படைதன்மையுடன் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின், சிறப்பான முறையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு, அனைத்து மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால், நிரூபித்து வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர்; அதனால் பதறுகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, 1.5 டன் ஆவின் ஸ்வீட் எடுத்து சென்ற விவகாரம் குறித்து, முறையான விசாரணை நடந்து வருகிறது. அ.தி.மு.க., அரசு, 10 ஆண்டுகளில், தமிழகத்தை கடனில் தள்ளிவிட்டுஉள்ளது.
விவசாயியிடம் லிட்டர், 32 ரூபாய்க்கு பால் கொள்முதல் செய்கிறோம். அதை, 42 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில், மொத்த வியாபாரிகளுக்கு லிட்டருக்கு, 1.50 ரூபாயும், சில்லரை வியாபாரிகளுக்கு, 75 காசும் அளிக்கிறோம். தற்போது, 80 ஆயிரம் போலி பால் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
காற்றில் பறந்தது!

நிகழ்ச்சியின் போது, கொரோனா விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. சிலருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பின், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., அங்கிருந்து சென்றனர்.இதையடுத்து, 5 கிலோ அரிசி வாங்கவும், அன்னதானம் பெறவும், மக்கள் சமூக இடைவெளி இன்றி திரண்டனர். வெயில் தாங்காமல், 10க்கும் மேற்பட்டவர்கள், அருகில் இருந்த ஏ.டி.எம்., மையத்தில் புகுந்தனர். போலீசார் இருந்தும், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE