சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜன.,26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.,15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்.,2) ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை முன்வைப்பார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. வரும் ஆக.,15ல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் உள்ளிட்ட சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‛கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம். இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழங்குமாறும்' அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போதும், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதற்கு, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். திமுக.,வினர் மூலம் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் ஸ்டாலினும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE