சென்னை: திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதத்திற்கு பிறகு தான் முழுமையாக பேச முடியும் எனவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருப்பதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் 75வது சுதந்திர தின பா.ஜ., லோகோவை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழக பா.ஜ., 75வது சுதந்திர தின விழாவை மகிழ்ச்சி திருவிழாவாக கொண்டாட இருக்கிறது. சுதந்திரத்துக்காக போராடிய 75 தலைவர்கள் இடங்களுக்கு, 75 பா.ஜ., நிர்வாகிகள் சென்று வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளனர். வரும் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் 'மக்கள் ஆசி வேண்டி' என்ற யாத்திரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கோவையில் துவங்க உள்ளது.

திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதத்திற்கு பிறகு தான் முழுமையாக பேச முடியும். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கப்படும்.
அதிமுக கூட்டணியில் தான் பா.ஜ., தொடர்கிறது, கூட்டணியில் குழப்பமில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ., தயாராவதற்கு குழு அமைத்துள்ளோம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE