புட்டபர்த்தி :முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனரும், ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை அறங்காவலருமான எஸ்.வி.கிரி, 84, இன்று (ஆக.12) காலமானார்.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி சத்ய சாய் ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த இவர், சில காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்தார். நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன், புட்டபர்த்தி சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை 10:00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
மறைந்த கிரிக்கு, மனைவி சுலோச்சனா கிரி, மகள் ராதா சர்மா, மருமகன் நாகராஜ் சர்மா, பேரன்கள் டாக்டர் ஆர்த்திக் சர்மா, அனீஷ் சர்மா உள்ளனர்.பகவான் சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தரான கிரி தமிழர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. ஆந்திர மாநிலத்திலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு முடித்த கிரி, சென்னை விவேகானந்தா கல்லுாரியில் பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1959ல் சட்டப்படிப்பை முடித்த அவர், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, ஆந்திர மாநில கேடர் அதிகாரியாக, 1960ல் பணியில் சேர்ந்தார்.
கடப்பா மாவட்ட கலெக்டராக 1969 முதல், 72 வரை பணியாற்றினார். ஆந்திர மாநில அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிய கிரி, மத்திய அரசு பணிக்கு சென்றார்.
நரசிம்மாராவ் பிரதமராக இருந்த காலத்தில், மத்திய கல்வித்துறை செயலராக பணியாற்றினார். அந்த பணியில் இருந்தபோது தான், மத்திய விஜிலென்ஸ் கமிஷனராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சில ஆண்டுகள் அந்த பணியில் இருந்த கிரி, ராஜினாமா செய்தார். புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அழைப்பை ஏற்று, சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த பணியில் ஏழாண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்.
அவர் ஆற்றிய ஒவ்வொரு பணியிலும், நேர்மைக்காகவும், தலைமைப் பண்புக்காகவும் பாராட்டு பெற்றவர். ஸ்ரீ சத்ய சாய்பாபா ஏற்படுத்திய முதல் அறக்கட்டளையில், எஸ்.வி.கிரியும் ஒருவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE