உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாட புத்தகங்களில் உள்ள தலைவர், அறிஞர் ஆகியோரது ஜாதி பெயர்களை நீக்கும் தமிழக அரசின் நடவடிக்கை தேவையற்றது. அப்படி செய்தால், நாட்டில் ஜாதி ஒழிந்து விடுமா? இது ஒரு வேண்டாத வேலை.
சாமிநாதன், மீனாட்சி சுந்தரம், முத்துராமலிங்கம், சிதம்பரம் என குறிப்பிட்டால், வகுப்பில் வருகை பதிவேடு வாசிப்பது போல உள்ளது. உ.வே.சாமிநாத அய்யர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சிதம்பரம் பிள்ளை என ஜாதி பெயரோடு சேர்த்து சொன்னால் தான் இன்னார் என புரிகிறது. முன்பெல்லாம் பெரிய மனிதரை குறிப்பிடும் போது, ஜாதி பெயரைத் தான் பயன்படுத்தினர்.
சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த லட்சுமணசாமி முதலியாரை எல்லாரும் மரியாதை நிமித்தமாக 'முதலியார்வாள்' என்றே அழைப்பர். அது ஜாதி பெருமை அல்ல; பெரிய மனிதருக்கு கொடுக்கப்படும் மரியாதை. அதே போல இன்றும், 'அய்யர்வாள், பிள்ளைவாள்' ஆகிய அடைமொழிகள் வழக்கில் உள்ளன. யாரையோ திருப்திப்படுத்த இந்த ஜாதி பெயரை நீக்குவது கோமாளித்தனம் அன்றி வேறில்லை.

கடந்த 1978-ல் எம்.ஜி.ஆர்., பதவியேற்றவுடன், தெரு பெயரில் இருந்த ஜாதிகளை அகற்றினார்; அதனால் ஜாதி ஒழிந்து விட்டதா என்ன? இன்றும் ஜாதி பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது; அதில் ஒன்றும் தவறில்லை. ஜாதியை முன்னிறுத்தி அரசியல் செய்வது தான் தடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து, மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த தலைவர்களுக்கு அடையாளமாய் இருக்கும் ஜாதி பெயரை புத்தகத்தில் இருந்து நீக்குவது துரதிருஷ்டவசமானது.
'ஜாதியை ஒழிக்கிறேன்' என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய். அதை வைத்து அரசியல் செய்வோர் எத்தனை பேர் அவரவர் வீட்டில் ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தியுள்ளனர் என பார்த்தால், அவர்களின் இரட்டை வேஷம் புரியும். ஜாதி என்பதை உயர்வு, தாழ்வு குறிக்கும் குறியீடாக பார்க்காமல், பெரும் மனிதர்களின் அடையாளமாக பாருங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE