பொன்னேரி: மானிய விலையில், ஐஸ் பெட்டி கேட்டு விண்ணப்பித்த மீனவர்கள், நான்கு மாதங்களாக காத்திருக்கும் நிலையில், பிடித்து வரும் மீன்களும் கெட்டுப் போவதால், வருவாய் இழப்பில் உள்ளனர். ஒரு வாரத்தில் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பழவேற்காடு மீனவப் பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், 70 முதல் 1,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட ஐஸ் பெட்டிகள் மானிய விலையில் கேட்டு, மீன்வளத் துறையில் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும், மானிய விலையில், ஐஸ் பெட்டிகள் வழங்கப்படவில்லை.
இதனால், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து, 10 முதல் 12 மணி நேரத்திற்கு பின், கரை திரும்பும் போது, அவை கெட்டு விடுகின்றன. கெட்டுப்போன மீன்களை வியாபாரிகள் வாங்க முன் வராத நிலையில், அவற்றை குறைந்த விலைக்கு கருவாடு தயாரிக்கும் பெண்களுக்கு விற்க வேண்டி உள்ளது. இதனால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால், தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மீனவர்களுக்கு, ஐஸ் பெட்டிகளை வழங்க மீன்வளத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கடந்த ஏப்ரல், மே மாதங்களில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐஸ் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சரிவர இயங்கவில்லை. தற்போதுதான் உற்பத்தி துவங்கி உள்ளனர். ஒரு வாரத்திற்குள் கிடைத்துவிடும். அவற்றை மீனவர்களுக்கு வழங்கி விடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.