சென்னை: 'உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்' என அ.தி.மு.க. நிர்வாகிகளை பன்னீர்செல்வம் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று திருநெல்வேலி தென்காசி விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.

இதில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 'உள்ளாட்சி தேர்தலில் நாம் 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வேறுபாடுகளை மறந்து கட்சி தலைமை நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்' என பன்னீர்செல்வம் பழனிசாமி அறிவுரை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE