'வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சக் கடுதாசி' என்கின்றனர் எச். ராஜாவும், கமலும். அப்படியே வைத்துக் கொண்டாலும், திவால் நிலைக்கு தள்ளியிருப்பது முந்தைய அ.தி.மு.க., ஆட்சி தானே!
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'என்னவொரு அரிய கண்டுபிடிப்பு... தி.மு.க., அரசை ஏதாவது சொன்னால், புதிது புதிதாக பதிலை கம்யூ.,க்கள் கண்டுபிடிக்கின்றனரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.
மோடியின் மூன்று வேளாண் சட்டங்களை போலவே, மின்சார சட்ட திருத்த மசோதாவையும் பார்க்க வேண்டும். இந்த சட்ட திருத்த மசோதா, விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும்; விவசாயத்திற்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறுகிறது.
- அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலர் விஜு கிருஷ்ணன்
'இப்படித் தான், கம்யூ.,க்கள் எதையாவது சொல்லி, எதிர்க்கட்சிகளை துாண்டி விடுகின்றனர்...' என, கூறத் துாண்டும் வகையில், அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலர் விஜு கிருஷ்ணன் பேச்சு.
வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வை எப்படியும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
- பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்
'சீப்பை ஒளித்து வைத்து விட்டால், திருமணம் நின்று விடுமா... பொறுத்திருந்து பார்ப்போம்...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை.
அரசு நிர்வாகத்தை வெளிப்படை தன்மையோடும், மக்கள் ஆதரவோடும் நடத்தும் நல்ல நோக்கத்தோடு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருப்பதை வரவேற்கிறோம்.
- இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்

'கடந்த பத்தாண்டுகளாக உள்ளாட்சி வரிகள் அதிகரிக்கப்படவில்லை. அந்த வரிகள் மற்றும் பிற வரிகளை அதிகரிக்கும் முன்னோட்டமே வெள்ளை அறிக்கை என கூறப்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.
மோடி அரசு உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக செயல்படுகிறது.
- தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் சாமி நடராஜன்
'உலகம் அறிந்த பொய் இது. எத்தனை காலத்திற்கு தான், இதையே சொல்லி வருவீர்கள்...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் சாமி நடராஜன் பேச்சு.
அ.தி.மு.க., ஆட்சியில் சீரழிந்துள்ள அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன்
'அரசு போக்குவரத்து கழகங்களை சீர்ப்படுத்துவது இருக்கட்டும்... முதலில் சம்பளம், பென்ஷனை முறையாக கொடுக்க முயற்சிக்கட்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE