சென்னை :''தமிழக நிதி நிலைமையை சரி செய்ய, மூன்றாண்டுகள் தேவை,'' என, பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ள, நிதி அமைச்சர் தியாகராஜன், பெண்களுக்கு மாதம் ௧,௦௦௦ ரூபாய் இலவசம் இப்போதைக்கு இல்லை என்று கைவிரித்திருக்கிறார். அதேநேரத்தில், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி; பெட்ரோலுக்கான வரி 3 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளும், அவரது முதல் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.சட்டசபையில், 2021 - 22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:நிதி நிலைமையை சீர்படுத்துவது, நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால், ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ செய்து முடிக்க முடியாத அளவிற்கு, இப்பணி மிகக் கடினமாக உள்ளது. இதற்கு குறைந்தபட்சம், இரண்டு - மூன்று ஆண்டுகள் வரை, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசு பரிசீலனை
அதே சமயத்தில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு, முன்னுரிமை அளித்து, அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம். அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை, எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து கவனமாக, அரசு பரிசீலனை செய்து வருகிறது.குடும்ப தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக முக்கியமானது. 'குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே, மாத உதவி கிடைக்கும்' என, சிலர் தரப்பில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.இதனால், பலர் ரேஷன் கார்டுகளில், பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை, குடும்பத்தின் தலைவராக மாற்ற முயற்சித்து வருகின்றனர். இத்திட்டத்தின் நோக்கம், நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவது மட்டுமே. எனவே, குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவைஇல்லை. இத்திட்டம் மிகவும் ஏழ்மையானவருக்கானது.
அவர்களுக்கு அடிப்படை உரிமைத் தொகை சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, தகுதியான குடும்பங்களை கண்டறிய, தேவைப்படும் அளவுகோல்கள் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இந்த வழிமுறைகள் பெருமளவில் விளம்பரப் படுத்தப்படும். தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பின், இத்திட்டத்தை அரசு திறம்பட செயல்படுத்தும்.
![]()
|
கூட்டுறவு கடன் தள்ளுபடி
கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் மற்றும் சுய உதவிக் குழு கடன்களை, தள்ளுபடி செய்வது, அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு, தேர்தலுக்கு முன், பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.இத்திட்டத்தின் மொத்த செலவு, 12 ஆயிரத்து 11௧ கோடி ரூபாய். இதற்காக, 4,80௪ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்ந்த போது, பல்வேறு குளறுபடிகள் தெரிய வருகிறது. சில மாவட்டங்களில் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன், சந்தேகத்திற்குரிய வகையில், அதிக அளவில் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. நகைக் கடன்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும் துாய்மை சரியாக கணக்கிடப்படவில்லை.
எனவே, இந்த முறைகேடுகள் குறித்து தீர ஆராய்ந்து, இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
இது போன்றே, இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் போதும், இதே நிகழ்வு பொருந்தும். எனவே, உரிய விசாரணைக்கு பின், தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும். அதேநேரம், கூட்டுறவு கடன் சங்கங்களில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்க, பல்வேறு கட்டங்களில், நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல்
தமிழகத்தில், 2.63 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இவை தான் எளிய உழைக்கும் வர்க்கம், அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள், பெட்ரோல் விலை உயர்வால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அவர்கள் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை, ௩ ரூபாய் குறைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது, உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தர குடும்பங்களுக்கும், பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு, 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.