இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்தேர்தல் ஆணைய இணையதளம் 'ஹேக்' செய்த இளைஞர் கைதுசஹாரன்பூர்-தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை, 'ஹேக்' செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்த இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இணைய தளம் இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்ற
இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்தேர்தல் ஆணைய இணையதளம் 'ஹேக்' செய்த இளைஞர் கைது

சஹாரன்பூர்-தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை, 'ஹேக்' செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்த இளைஞர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இணைய தளம் இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்ற இளைஞர், கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்துள்ளார். பி.சி.ஏ., பட்டம் பெற்றுள்ள இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை ஹேக் செய்துள்ளார். மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயன்படுத்தும் 'பாஸ்வோர்ட்'களை உபயோகித்து, அந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

அதன் வாயிலாக ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்து வந்துள்ளார். இதை அறிந்த தலைமை தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகளிடம் இதுகுறித்து புகார் அளித்தது. விசாரணைஇந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரும், சஹாரன்பூர் போலீசாரும் இணைந்து, விபுல் சைனியை நேற்று கைது செய்தனர். சைனியின் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் வாகனங்களில் சென்றபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உஸ்மான் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிறுவன் உயிரிழப்பு

ரஜோரி: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பா.ஜ., நிர்வாகி ஜஸ்பிர் சிங், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் மீது கையெறி குண்டு வீசி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஜஸ்பிர் சிங் உறவினரின், 3 வயது மகன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நிலச்சரிவு பலி உயர்வு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாவூர் மாவட்டத்தில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது

உயிர் உள்ளவரை சிறை

மதுரா: உத்தர பிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்த சவுபி என்பவர், தன் மனைவி மற்றும் அவரது முதல் கணவரின், 15 வயது மைனர் மகளை 2013ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வந்த புகார் அடிப்படையில் சவுபி மீது 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், நேற்று மதுரா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 'குற்றவாளியான சவுபி, கடைசி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என, தீர்ப்பு வழங்கப்பட்டது.


தமிழக நிகழ்வுகள்

திருட்டு மொபைல் போன் விற்பனை போலீஸ்காரர் உட்பட மூவர் கைது

அண்ணாநகர்: திருட்டு மொபைல் போனை விற்று, அதில் கிடைத்த பணத்தை திருடனுடன் பங்கு போட்டுக் கொண்ட, புழல் சிறைக்காவலர் உட்பட மூவர், நேற்று கைது செய்யப்பட்டனர்.

அண்ணாநகர் காவல் சரக பகுதிகளில், தொடர்ந்து மொபைல் போன் திருட்டு நடந்ததால், அண்ணாநகர் தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். திருடப்பட்ட மொபைல் போன்களின் ஐ.எம்.இ.ஐ., எண்ணை வைத்து ஆய்வு செய்த போது, அவற்றை பயன்படுத்தி வந்த சிலர் போலீசில் சிக்கினர்.

அவர்களிடம் விசாரித்த போது, போலீஸ்காரர் ஒருவரிடம் பணம் கொடுத்து மொபைல் போனை வாங்கியதாக கூறினர். திருட்டு மொபைல் போனை விற்றது தொடர்பாக, புழல் சிறைக்காவலராக பணியாற்றும் ரமேஷ் என்பவர் கைதானார். ரமேஷுக்கும், மொபைல் போன் திருட்டில் கைது செய்யப்பட்ட, சிபி, 29, என்பவருக்கும், நெருங்கிய நட்பு மலர்ந்துள்ளது.

தனியார் விடுதியில் ரூ 25 லட்சம் திருட்டு

செம்பியம்: தனியார் விடுதியில் தங்கி இருந்தவர் வைத்திருந்த பணம் திருடு போனது.

சென்னை பெரவள்ளூர், தன்ராஜ், 2வது தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஷீத், 74; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவர், தன் குடும்பத்தை பிரிந்து, 3 ஆண்டாக, பெரம்பூர், திருவேங்கடம் தெருவில் உள்ள, எம்.என்.எம்., தனியார் விடுதியில், தங்கியிருந்தார்.சில மாதங்களுக்கு முன், கொளத்துாரில் உள்ள, தனக்கு சொந்தமான இடத்தை, 73 லட்சம் ரூபாய்க்கு விற்றார்.

அதில், 40 லட்சம் ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்தார். மீதமுள்ள, பணத்தை கைவசம் வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த, 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு அறையை பூட்டிவிட்டு, வெளியே சென்றவர், அன்று இரவு தான் மீண்டும் அறைக்கு திரும்பினார். அப்போது, பையில் வைத்திருந்த பணத்தில், 25 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது தெரிய வந்தது. அவர், இது குறித்து, செம்பியம் போலீசில், நேற்று முன் தினம் இரவு, புகார் செய்தார். போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

இரு மாதங்களுக்கு முன் வெளியே வந்த சிபி, வட மாநில நபர்களிடம் மட்டும், மொபைல் போனை திருடி வந்தார். இந்த மொபைல் போன்களை ரமேஷிடம் கொடுத்து, கார்த்திக் என்பவருடன் சேர்ந்து அவற்றை விற்று, கிடைக்கும் பணத்தை மூவரும் பங்கு போட்டுக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். திருடனுடன், போலீஸ்காரரும் கைகோர்த்த சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


9வது மாடியிலிருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பலி

சிந்தாதிரிப்பேட்டை: தமிழக மின் வாரிய தலைமை அலுவலகத்தில், 9வது மாடியிலிருந்து தவறி விழுந்த உதவி பிரிவு அதிகாரி, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

சென்னை அண்ணா சாலையில், தமிழக மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இதில் மணிகண்டன், 50, என்பவர் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம், 12:45 மணியளவில், ஒன்பதாவது மாடியில் நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கை தவறி மொபைல் போன் கீழே விழுந்தது. அதை பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவரும் கீழே விழுந்தார்.இதில், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.சம்பவம் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

கடனை திருப்பி கேட்ட நண்பர் படுகொலை

மதுரவாயல்: மதுரவாயல், வேம்புலி நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 28. இவரது நண்பர் பாலாஜி, 22. சில மாதங்களுக்கு முன் பாலாஜி, தன் தாயின் மருத்துவ செலவுக்கு சதீஷிடம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.

ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித் தராமல், பாலாஜி அலைக்கழித்தார். நேற்று மாலை, பணத்தை கேட்க பாலாஜியின் வீட்டிற்கு சென்ற சதீஷ், பாலாஜியின் பெற்றோரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, சதீஷை ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினார். மதுரவாயல் போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்.

பிரதமரை கடுமையாக விமர்சித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

மாதவரம்: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, இணையதளத்தில் அவதுாறு பரப்பிய முதியவர் கைதானார்.

சென்னை, மாதவரம் வி.ஆர்.டி.நகர், 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா, 62. இவர், 'பீப்புள் வெல்பர் டிரஸ்ட்' என்ற அமைப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து, இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனால் அதிருப்திஅடைந்த பலர், உத்தரபிரதேச மாநிலம், ஜான்பூர் கோட்வாளி போலீசில் புகார் செய்தனர்.இதன்படி, மன்மோகன் மிஸ்ராவை தேடி வந்த போலீசார், நேற்று மதியம் கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், ஜான்பூர் கோட்வாளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


latest tamil news


வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் அளவில் சேதம்

காங்கேயம்:வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது.

வெள்ளகோவிலைச் சேர்ந்த தங்கராஜ்,25, என்பவர், வெள்ளகோவில் சுப்பிரமணியக்வுண்டன் வலசு அருகே எல்.எஸ்.எம் என்கும் நூல் மில், (கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பு) கடந்த ஐந்து வருடங்களாக வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 5:00 மணி அளவில் மில்லில் திடீரென கரும்புகை வெளியேறியது. அங்குள்ள ஒரு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பிடித்து எரிந்தது.

தகவலந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட குழுவின் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் நூல், இயந்திரம், கட்டடம் என ரூ.5 லட்சம் அளவிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X