சில வரி செய்திகள்... ரேஷன் கடை அமைக்கப்படுமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... ரேஷன் கடை அமைக்கப்படுமா

Added : ஆக 14, 2021
Share
பொங்கலுார், ஆண்டிபாளையத்தில் புதிதாக குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு ஆயிரம் பேர் வரை மக்கள் தொகை உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள வேலம்பட்டிக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்

பொங்கலுார், ஆண்டிபாளையத்தில் புதிதாக குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு ஆயிரம் பேர் வரை மக்கள் தொகை உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள வேலம்பட்டிக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆண்டிபாளையத்திலேயே பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பசு மாடு போராடி மீட்பு

வெள்ளகோவில் அருகே கம்பளியம்பட்டியை சேர்ந்த மோகனசுந்தரம், 52. விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடு நேற்று முன்தினம், மதியம் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது; 15 அடி ஆழத்தில் பக்கவாட்டு சுவற்றில் இருந்த மரத்தில் சிக்கி நின்றது. இது குறித்து, தகலறிந்த, வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தனசேகரன், வேலுசாமி தலைமையில், வீரர்கள், கயிறு கட்டி மாட்டை லாவகமாக உயிருடன் மீட்டனர். பசு மாட்டை பத்திரமாக மீட்ட, தீயணைப்பு வீரர்களை விவசாயிகள் பாராட்டினர்.

'நீட்' தேர்வு; 318 பேர் பதிவு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு செப்., 12ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த, ஜூலை 13ம் தேதி துவங்கியது. ஆக., 10 வரை, ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், 11 ஆயிரத்து, 236 பேர் பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், 318 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நீட் தேர்வில், 119 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்ப பதிவில் பிழைகள் இருப்பின் வரும், 16ம் தேதிக்குள் திருத்திக்கொள்ளலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நுாலக தினம்
திருப்பூர் - முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் மற்றும் நடவு பதிப்பகம் சார்பில், நுாலக தினம் கொண்டாடப்பட்டது. நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட புத்தகங்கள், நுாலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் 'குறிஞ்சி' மாணவர் இதழை வெளியிட, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், இதழ் ஆசிரியர் முத்துபாரதி பெற்றுக்கொண்டனர். ஆன்லைனில், நுாலகர் தின வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. கொல்கத்தா தமிழ்ச் சங்க நிறுவன தலைவர் ஞானசேகரன், 'நுால்கள் செய்யும் மாயம்' மற்றும் எர்ணாகுளம் தமிழ் சங்க செயலாளர் லட்சுமணன் 'மொழி பெயர்ப்பில், தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பிலும் பேசினர். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

பூக்கள் விலை சரிவு

ஆடி வெள்ளி துவக்கத்தில் அரளி ஒரு கிலோ, 120 ரூபாய்க்கு விற்றது. பிரசித்தி பெற்ற கோவில்கள் மூடப்பட்டதால், விலை சற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் கோவில்களை மூட அரசு உத்தரவிட்டது. இன்று கடைசி ஆடி வெள்ளி என்பதால், பூக்கள் விலை சற்று உயருமென வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாறாக பூ விலை சரிவை சந்தித்தது. நேற்று ஒரு கிலோ, அரளி, 60 ரூபாய்க்கு விற்றது. முல்லை, 320 ரூபாய், மல்லிகை, 800 ரூபாயாக இருந்தது.

அலட்சியம் வேண்டாம்!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழக மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஊரடங்கு தளர்வுக்கு பின், பெற்றோர்கள், மதிப்பெண் மற்றும், டி.சி., சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பள்ளிகளை நோக்கி வரத்துவங்கியுள்ளனர். மேலும், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான பள்ளிகள் முறையான கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, சி.இ.ஓ.,க்கள் அனைவரும் தனியார் பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
டவுன் பஸ் இயக்கணும்

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, இடுவாய் வழியாக, 63 வேலம்பாளையம் வரை, 2ம் எண் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதனால், இடுவாய் ஊராட்சி கிராம மக்களும், விவசாயிகளும் பயனடைந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும், நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படவே இல்லை. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''பஸ் இயக்கப்படாமல் இருந்தால்,16ம் தேதி காலை, 10:00 மணிக்கு, 'டிப்போ' முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்,'' என்றார்.

சிற்றிதழ் வெளியீடு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 'ஆகஸ்ட், 15 தகவல் தொகுப்பு' என்ற சிற்றிதழ் வெளியிட்டு விழா, திருக்குறள் இயக்கக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் வின்செண்ட்ராஜ் தலைமை வகித்தார். கிளாசிக் கார்ட்ஸ் கந்தசாமி முதல் பிரதி வெளியிட, ஆசிரியர் பால்ராஜ் பெற்றுக் கொண்டார். இயக்க உறுப்பினர் தங்கதுரை நன்றி கூறினார். இதழில், இந்திய அரசின் சட்டதிட்டங்கள், நாட்டின் வரலாறு உட்பட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன.

37 விவசாயிக்கு சான்று
சேவூர் பிர்காவுக்குட்பட்ட விவசாயிகளுக்கான சிறு, குறு விவசாயி சான்று வழங்கும் முகாம், சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் வடிவேல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில், 45 விவசாயிகள் பங்கேற்றனர். 37 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்று உடனடியாக வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் அருள்வடிவு, தோட்டக்கலை உதவி இயக்குநர் மாலதி, வேளாண் அலுவலர் சத்யா பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் வேலுசாமி செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X