தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்டுக்கு எதிர்ப்பும், ஆதரவும்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஈரோடு: தி.மு.க., ஆட்சி அமைத்த பின் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். டீசல் விலை குறைக்காததால் தொழில் முனைவோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் பாலகிருஷ்ணன்: ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, பெட்ரோல் விலை, 3

ஈரோடு: தி.மு.க., ஆட்சி அமைத்த பின் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். டீசல் விலை குறைக்காததால் தொழில் முனைவோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் பாலகிருஷ்ணன்: ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, பெட்ரோல் விலை, 3 ரூபாய் குறைப்பை வரவேற்கலாம். டீசலுக்கும் விலை குறைத்திருக்கலாம். விவசாய கடன் தள்ளுபடி கட்டாயம் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை விரைவுபடுத்த வேண்டும். முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை, தனியார் மருத்துவமனையும் செயல்படுத்த யோசனை தர வேண்டும். சிறு, குறு தொழிலுக்கு நிலுவையில் உள்ள கடனுடன், கூடுதல் கடன் வழங்குவது பலன் தரும். வரி உயர்வு, விலை உயர்வு இல்லாததால் அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் சிப்காட் அறிவித்திருப்பது வரவேற்கலாம்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை பொது செயலாளர் சிவநேசன்: விபத்தில்லா தமிழகத்துக்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சிங்கார சென்னை என இரண்டாம் திட்டத்தை வரவேற்கலாம். பெட்ரோல் மீது வரி குறைத்தாலும், டில்லி போல ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வராதது ஏமாற்றம். தொழில் துவங்க நிலவள வங்கி மூலம், 45 ஆயிரம் ஏக்கரில் அடையாளம் காணப்படும் என்பது வரவேற்புடையது. வணிகர்களை பொறுத்தவரை, தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சீரமைக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் உள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய, 28 ஆயிரம் கோடி ரூபாய் வரியை வசூலிக்க ஒரு சமாதான திட்டம் கொண்டு வரப்படும் என்பது வரவேற்கத்தக்கது. தற்போது தொழில், வணிகம் முடங்கி உள்ள சூழலில், தொழில், வணிகத்துக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், மானியம், வட்டி குறைப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை.


ஈரோடு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் ராமசாமி: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' அறிவித்தது, ஒவ்வொரு துறையாக அலைவதை தவிர்க்கும். கைத்தறியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி உயர்வுக்கு சலுகை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இலவச வேட்டி, சேலை, சீருடை தயாரிப்பை தொடர அனுமதித்துள்ளனர். இதை நம்பித்தான், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட நெசவாளர் வாழ்வாதாரம் உள்ளது. ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளது, ஜவுளி தொழிலுக்கு, மிகப்பெரிய உதவியாகும். நீர் நிலைகளில் கழிவை திறந்துவிட்டால், தானியங்கி மாசு கண்டறியும் கருவி மூலம் காண்பித்து கொடுக்கும் முறையை அறிமுகம் செய்யவுள்ளதை வரவேற்கிறோம்.


ஜெயந்தி, கருமாண்டிசெல்லிபாளையம், பெருந்துறை: தமிழகத்தை மின்மிகை மாநிலம் எனக் கூறுவது தவறு. 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தையில் கொள்முதல் செய்தே, தமிழக அரசு சமாளிக்கிறது என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக இரவில், மின்தடை பயமின்றி நிம்மதியாக உறங்கினோம். முன்பு தி.மு.க., ஆட்சியில் நள்ளிரவு மின்தடையால் கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு பெண்கள் கஷ்டப்பட்டதை இன்றும் மறக்கவில்லை.


சின்னசாமி, மாவட்டத் தலைவர், ஏ.ஐ.டி.யு.சி.,: அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு, 215 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். கட்டுமான நலவாரிய நிதியை, வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.


பெ.கு.பொன்னுச்சாமி, மாவட்டத் தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: கொ?ரானா காலத்தில், பெற்றோரை இழந்த, அரசு பள்ளி மாணவ, மாணவியரின், 5,963 பேரின் கல்வி செலவையும், அவர்களுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவது மிக நல்ல விஷயம். கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 32 ஆயிரத்து, 599 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர் நலனை காக்க, மகப்பேறு கால விடுப்பு, ?? மாதமாக உயர்த்தப்பட்டதும் கவனம் பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக் கொள்கை உருவாக்க புதிய வல்லுனர் குழு அமைக்கும் அறிவிப்பும் நல்ல முடிவு.


மகாலிங்கம், தலைவர், பெருந்துறை சிப்காட் தொழிலதிபர் சங்கம்: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய பாக்கியை, விரைவாக வசூலித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிறு, குறு தொழில் முனைவோரின் சிக்கலை ஆராய, குழு அமைப்பது மற்றும் வங்கி கடன் எளிமையாக்குவது போன்ற அறிவிப்பும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது.


ராஜமாணிக்கம், ஈரோடு: பெட்ரோல் விலையோடு, டீசல் விலையையும் குறைத்திருந்தால், காய்கறி, மளிகை உள்ளிட்ட உணவு பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்திருக்கும். மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிபாறை அணைகளின் நீர் தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும், மாநிலம் முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த, 6,607 கோடி நிதி ஒதுக்கியதும் வரவேற்கத்தக்கது.


துரைராஜ், ஈரோடு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை, 150 நாளாக உயர்த்தி, கூலியையும், 300 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தது வரவேற்புக்குரியது. அதேவேளை விவசாய பணிக்கும் அவர்களை ஒருங்கிணைத்து அனுப்பினால், விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவாது.


மணிகண்டன், ஆட்டோ டிரைவர், கோபி: அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. இதுவரையில் இல்லாத வகையில், காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் முறை வித்தியாசமாக உள்ளது. பட்ஜெட்டில் எந்த குறையும் இல்லை.


ரவிசேகர், கோபி, நல்லகவுண்டம்பாளையம்: பட்ஜெட்டின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், அறிவிப்புகள் முறையாக, அந்த துறை மூலம் அடித்தட்டு பாமர மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். இதற்காக தனியாக கண்காணிப்பு குழு அமைத்து, ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, முறையாக அந்தந்த துறைக்கு சென்று சேர்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X