நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை நம் நாடு வென்றுள்ளது. தடகளப் போட்டியில் முதல் தங்கத்தை ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா வென்று புதிய சாதனை நாயகனாக திகழ்கிறார். ஹாக்கி விளையாட்டிலும்புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இது இந்திய விளையாட்டு துறைக்கு புதிய துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்கு உள்ள தடைகளை, மத்திய, மாநில அரசுகள் தகர்த்தால், அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை அறுவடை செய்யலாம்.
உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஆசிய நாடான ஜப்பானின் டோக்கியோவில் சமீபத்தில் நடந்தது. இதில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். தடகளப் பிரிவில் கிடைத்துள்ள முதல் தங்கம் இது. தனிநபர் பிரிவில் கிடைத்துள்ள இரண்டாவது தங்கம்.
ஹாக்கி பிரிவில் எட்டு முறை தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள நம் நாடு, 41 நாடுகளுக்குப் பின் பதக்கம் வென்றுள்ளது. ஆண்கள் பிரிவில் வெண்கலம் கிடைத்துள்ளது. மகளிர் பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளோம். இது புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.
அதேபோல் ஒரு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் கிடைத்துள்ளது. ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்கள் நம் வீரர், வீராங்கனையர் வென்றுள்ளனர்.
இந்த சாதனை போதுமா?
இந்த வெற்றியை ஊக்கமாக வைத்து 2024ல் பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் மற்றும் அதற்கடுத்த ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்வதற்கு நம் வீரர்களை தயார் செய்ய முயற்சிகள் உடனடி யாக எடுக்க வேண்டும்.ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்கு ஏன் அதிக பதக்கங்கள் கிடைப்பதில்லை என்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்தால் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை அறுவடை செய்ய முடியும். நம் வெற்றிக்கு தடையாக உள்ள சில காரணங்கள்:
விளையாட்டு பட்ஜெட்
மக்கள் தொகையை கணக்கிடும்போது சீனாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் நம் நாடு உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது பதக்கப்பட்டியலில் நம் நாடு கடைசி இடத்தில் உள்ளது.லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 1984ல் நடந்த ஒலிம்பிக்கில்தான் சீனா முதல் முறையாக பங்கேற்றது. அப்போது, 15 தங்கம் உட்பட, 32 பதக்கங்கள் வென்றது. அதே நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் 38 தங்கம் உட்பட 406 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து 2025ம் ஆண்டு வரை விளையாட்டுக்காக 57 லட்சம் கோடி ரூபாய் செலவிடப் போவதாக சீனா கூறியுள்ளது.நம் நாட்டில் கடந்த 2020 - 2021 பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 2,826 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதுவே, 2021 - 2022 பட்ஜெட்டில், 230 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, 2,596 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.சீனாவை முன்னுதாரணமாக வைத்து விளையாட்டுத் துறைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வடகிழக்கை கவனிப்போம்
கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விளையாட்டில் பிரகாசித்து வருகின்றனர். குறிப்பாக மணிப்பூர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சர்வதேச போட்டிகளில் அசத்தி வருகின்றனர்.குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பளுதுாக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். பழங்குடியினர் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் உள்ள திறமைகள் குறித்து பல காலமாகவே அரசு கவனிக்காமலே இருந்து விட்டது.கிராமங்களில் உள்ள திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவித்தால் பல நல்ல வீரர் வீராங்கனையர் நமக்கு கிடைப்பர்.
கிரிக்கெட் மவுசு
பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் விளையாட்டுக்கு நம் நாட்டில் மிகப் பெரிய மவுசு உள்ளது. அது இந்திய அணி விளையாடும் போட்டியாகஇருந்தாலும், உள்ளூர் போட்டிகளாக இருந்தாலும், அதற்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. 'டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.அதேபோல் விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதும் நம் குடும்பங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. அவர்களுடைய அதிகபட்ச எதிர்பார்ப்பு, விளையாட்டு வாயிலாக ஏதாவது அரசு வேலை கிடைக்குமா என்பதாகவே உள்ளது.இந்த மனநிலையை தகர்க்க வேண்டும். எந்த விளையாட்டாக இருந்தாலும் வீரர்களையும், முன்னாள் வீரர்களையும் கவுரப்படுத்த வேண்டும்.
பயிற்சி தேவை
நம் நாட்டில் நவீன வசதிகள் உள்ள விளையாட்டு மைதானங்கள் அதிக அளவில் இல்லை. முதலில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்ய வேண்டும்.ஹாக்கி அணிகளுக்கு ஒடிசா மாநில அரசு முழு உதவிகளை செய்து தருகிறது. அதுபோல ஒவ்வொரு மாநிலமும், குறிப்பிட்ட விளையாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர வேண்டும். தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
'டாப்ஸ்' எனப்படும் ஒலிம்பிக் வீரர்களை கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதுடன், தேவையான பயிற்சியும் வழங்கப்படுகிறது. கடந்த 2014ல் துவக்கப்பட்ட இந்த திட்டத்தில் பல வீரர், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதுபோல் கேலோ இந்தியா திட்டத்தின் கீழும் எதிர்கால ஒலிம்பிக் வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்த திட்டங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்தி சிறந்த வீரர், வீராங்கனையரை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு பயிற்சி அளித்து தயார்படுத்த வேண்டும்.ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கினால் அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா, கோட்டை கட்ட முடியும்.
கவனிப்பரா?
வீரர், வீராங்கனையருக்கு உள்ள மிகப் பெரிய குறையே, வென்றால் கொண்டாடுவதும், அதன் பின் மறந்து விடுவதும் தான். குறிப்பிட்ட வயதுக்கு மேல் விளையாட முடியாத வீரர்கள், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு கடுமையாக போராடும் சூழ்நிலையே நிலவுகிறது. இதை மாற்றினால், நம்பிக்கையுடன் வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுவர்.
சில உதாரணங்கள்
* பீஹார் கபடி அணிக்காக பல தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் சாந்தி தேவி. கடந்த 1980களில் பதக்கங்களை அள்ளிக் குவித்த இவர், குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். கூலித் தொழிலாளியை திருமணம் செய்து வறுமையில் வாடுகிறார்
* தேசிய மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடி சர்வதேச போட்டிகளில் பெருமை தேடி தந்தவர் ராஷ்மி பத்ரா. தற்போது திருமணமாகி பீடா கடை நடத்தி வருகிறார்
* மத்திய பிரதேசத்தை சேர்ந்த சீமா சாஹா, சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இரண்டு வெண்கலம் வென்றவர். தற்போது குடும்பத்தை காப்பாற்ற பானி பூரி கடை நடத்தி வருகிறார்
* பஞ்சாபைச் சேர்ந்த ஸ்வரண் சிங், 2013 ஆசிய சாம்பியன் போட்டியில் துடுப்பு படகு பிரிவில் தங்கம் வென்றவர். கடந்த 2012 ஒலிம்பிக் போட்டி இறுதியில் எட்டு பேரில் ஒருவராக வந்தார். விபத்தில் முதுகெலும்பு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற விவசாய கூலியாகவும், கார் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.இதுபோல் ஆயிரக்கணக்கான சோகக் கதைகள் பலருக்கும் தெரியாமல் உள்ளன. - நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE