75வது சுதந்திர தின விழாவில்...மக்களை அலைய விடாதீங்க! தோலுரித்த மாநகராட்சி கமிஷனர்| Dinamalar

தமிழ்நாடு

75வது சுதந்திர தின விழாவில்...மக்களை அலைய விடாதீங்க! தோலுரித்த மாநகராட்சி கமிஷனர்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை:கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், பேசிய கமிஷனர் ராஜகோபால், ஒவ்வொரு பிரிவின் செயல்பாடும் தற்போது எப்படி இருக்கிறது, 'ஸ்கேன்' எடுத்தது போல், புட்டு புட்டு வைத்தார். அவரது உரை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை சிந்திக்க வைத்தது.கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த, 75வது ஆண்டு சுதந்திர தின விழாவில், கமிஷனர் ராஜகோபால், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து
75வது சுதந்திர தின விழாவில்...மக்களை அலைய விடாதீங்க!  தோலுரித்த மாநகராட்சி கமிஷனர்

கோவை:கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், பேசிய கமிஷனர் ராஜகோபால், ஒவ்வொரு பிரிவின் செயல்பாடும் தற்போது எப்படி இருக்கிறது, 'ஸ்கேன்' எடுத்தது போல், புட்டு புட்டு வைத்தார். அவரது உரை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை சிந்திக்க வைத்தது.

கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த, 75வது ஆண்டு சுதந்திர தின விழாவில், கமிஷனர் ராஜகோபால், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தேசியக்கொடி ஏற்றினார். துணை கமிஷனர் விமல்ராஜ் வரவேற்றார்.பின், 25 ஆண்டுகள் பணி முடித்த, 36 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ், 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு, ஓய்வு பெற்ற ஊழியர்களில் 20 பேருக்கு மொத்தம், 76 லட்சத்து, 13 ஆயிரத்து, 968 ரூபாய் பணப்பயன், கொரோனா தொற்று பரவிய காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களில், 81 தொழிலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

அதன்பின், கமிஷனர் ராஜகோபால், சுதந்திர தின உரையாற்றினார். அடுத்த சுதந்திர தின விழாவுக்குள், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை, அலுவலர்களுக்கு இலக்காக வைத்து பேசினார்.கமிஷனர் ராஜகோபால் பேசியதாவது:ஒவ்வொரு பிரிவினரும், அடுத்த ஓராண்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை, சுய மதிப்பீடு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.நிர்வாகத்தில் பதவி உயர்வு, இட மாறுதல் வழங்குவதில் பிரச்னைகள் இருக்கின்றன. ஓராண்டுக்குள் தீர்வு காண வேண்டும்.

நகர் முழுவதும் ரோடு, குடிநீர் பிரச்னை இருக்கிறது.பெரிய திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றன; ஓராண்டுக்குள் தரமாக, எந்த கெட்ட பெயரும் வராமல் பணிகளை முடிக்க வேண்டும்.நிறைய இடங்களில் குப்பை சுகாதாரத்துறையில் மருத் துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துாய்மை பணியாளர்கள் என அனைவரும் ஓராண்டாக துாக்கமின்றி, கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறீர்கள். இருந்தாலும், திடக்கழிவு மேலாண்மையில், சில பிரச்னைகள் இருக்கின்றன.நிறைய இடத்தில் குப்பை தேங்கியிருக்கிறது; தொட்டிகள் இல்லை; வண்டிகள் வேலை செய்யாமல் இருக்கின்றன. நாம் இணைந்து பணிபுரிந்தால், ஓராண்டுக்குள் ஓரளவுக்கு தீர்வு காண முடியும்.வருவாய்ப்பிரிவு கஷ்டமான சூழலில் இருக்கிறது.

ஒருபுறம் கொரோனா பாதிப்பு; இன்னொருபுறம் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய சூழல். ஏகப்பட்ட நிலுவை தொகை இருக்கிறது.அலைய விடாதீர்கள்!கோவை நகராட்சியாக, 1866ல் உருவாகியிருக்கிறது; இப்போது, 2021ல் இருக்கிறோம். இவ்வளவு வருஷம் கடந்தும் கூட, குடிநீர், தெருவிளக்கு வசதி சரியாக செய்து கொடுக்காமல் இருக்கிறோம் என்றால், வருத்தமான விஷயம். ஓராண்டுக்குள் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்; மக்களை அலைய வைக்கக்கூடாது. அனைத்து துறையினரும் இணைந்து பணிபுரிந்தால் மட்டுமே சாத்தியமாகும்.மாநகராட்சியை வைத்து, பலர் சம்பாதிக்கின்றனர். ஆனால், மாநகராட்சிக்கு பணம் வருவதில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. வரி மற்றும் வரியில்லாத இனங்களில் கவனம் செலுத்தி, வருவாய் ஈட்ட வேண்டும்.

நகரமைப்பு தொடர்பாக, வேறொரு கட்டமைப்பு வரப்போகிறது; அது தொடர்பான பிரச்னைகள், நகரமைப்பு பிரிவுக்கு இனி இருக்காது என நினைக்கிறேன்.ஏகப்பட்ட கட்டடங்களுக்கு, வரைபட அனுமதி இல்லை. ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. ஆக்கிரமிப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் பேசினார்.'கணக்கு பிரிவில் நடப்பதென்ன?'''கமிஷனராக பொறுப்பேற்று, இரு மாதங்களாகி விட்டது. மாநகராட்சி கணக்கு பிரிவில் வரவு - செலவு சுத்தமாகவே புரியவில்லை.
வருமானம் எவ்வளவு; செலவு எவ்வளவு? இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. என்ன நிதி, எதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை ஒழுங்குபடுத்த வேண்டும்,'' என்றார் கமிஷனர்.மாணவிக்கு பாராட்டு!ராமலிங்கம் காலனி மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி மொஷிகா, பெற்றோர் வழிகாட்டுதலில் பிராமி எழுத்துக்களை கற்றுக்கொண்டு, தானாகவே ஆத்திச்சூடி, நன்னுால், மூதுரை ஆகியவற்றை எழுதி புத்தகமாக வெளியிட்டதை, கமிஷனர் பாராட்டி, விழாவில் அன்பளிப்பாக, 'டேப்லெட்' வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X