ஜெனிவா: ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து, ஐ.நா., சபையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி சரண் அடைந்து, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி, அந்த நாட்டு அரசுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலை துாக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கேட்க துவங்கியுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் ஆப்கனில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் சபை இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரம்) துவங்கும் இந்த கூட்டத்தில், ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டனியோ குடாரெஸ் உரையாற்றுகிறார்.
பெண்களை நினைத்து கவலை: மலாலா

ஆப்கனில், பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்வதாக, மலாலா தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது டுவிட்டர் பதிவில், ஆப்னில் போரை உடனடியாக நிறுத்த, உள்ளூர் தலைவர்கள், உலகத் தலைவர்கள் வழிவகை செய்ய வேண்டும் எனவும், அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE