கமுதி: ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க., அரசின் சாதனை என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செய்த பின்பு நினைவிடம் முன் தேசியக்கொடி ஏற்றினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது கொரோனா காரணமாக கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது அதனையும் மீறி தி.மு.க., பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தியது.
தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த தடை என்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் தவிர புதிய திட்டங்கள் பெரிதாக எதுவும் இல்லை.தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் இன்று தகுதி உள்ளவர்களை கண்டறிந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 44 ஆயிரம் கோயில் உள்ளது. அதில் 40 ஆயிரம் கோயில்களில் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக பணியாற்றி வருகின்றனர்.
தமிழக முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் தமிழக மக்களை திசை திருப்புகிறார்கள். மற்ற மத வழிபாடுகளையும் தமிழில் நடத்த தி.மு.க., அரசு வலியுறுத்துமா. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE