சென்னை- -''எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்,'' என, சுவாமிநாதன் சிவாச்சாரியார் தெரிவித்தார்.

சென்னை வாழ் சிவாச்சாரியார் சமூக நல சங்கம்சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சுவாமிநாதன் சிவாச்சாரியார் கூறியதாவது:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசு அறிவித்து, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பூஜை செய்தவர்களை நீக்கி விட்டு, புதிய நபர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இது, ஆகம விதி மீறல்.பெரும்பாலான கோவில்களில் சிவாச்சாரியார்கள், தினக்கூலி, வாரக்கூலி, சம்பளம் இல்லாமல்தட்சணையை மட்டும் எதிர்பார்த்து பணிபுரிந்து வருகின்றனர். அது போன்றவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதைவிடுத்து, அதிக வருமானம் வரும், சிவாச்சாரியார்கள் பணியாற்றும் கோவில்களில் தான், பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள் இல்லாத பல கோவில்களுக்கு அர்ச்சகர்களை நியமித்து, அனைத்து விதமான பூஜைகளையும் செய்ய வேண்டும். சிவாச்சாரியார்கள் செய்யும் பூஜைகளை நிறுத்தி விட்டு, அங்கு புதிய அர்ச்சகர்களை நியமிப்பது தான் எங்கள் வருத்தம்.குல தெய்வ கோவில்களில், எந்த ஜாதி பூசாரிகளை வைத்து பூஜை நடக்கிறதோ; அவர்களை வைத்து தான் பூஜை செய்ய முடியும். நம் முன்னோர் வழிகாட்டுதலின் படி, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் வழிபாடு செய்கின்றனர்.

அரசாங்க பணி என்பது வேறு; ஆன்மிகப் பணி என்பது வேறு.பிராமணர் சமுதாயத்தின் உட்பிரிவான ஆதிசைவர் எனும் சிவாச்சாரியார்கள் சிறுபான்மையினர். அவர்களை அழித்து விடாதீர்கள்.எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE