அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகள், முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்; திருச்சி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோவில்களில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சட்ட மசோதா, ௧௯௭௦ அக்., ௨ல், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், வழக்குகள் காரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்தது. 51 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றி உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமையாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில் இப்பிரச்னையை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கையில் எடுத்திருக்கிறார்.
சுப்பிரமணியன் சாமி பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் முதல்வராகி இருக்கிறார். தி.க., ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். 'சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்' என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்.திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.
இதை, தி.க., தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் போற்றி மகிழ்கின்றனர். '51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்' என, தி.க.,வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான், ஹிந்து அறநிலைய சட்டம் - 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம். கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அப்படி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்.
முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் 'வாபஸ்' பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE