சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:
ஈ.வெ.ரா நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை நாம் வழங்கியிருக்கிறோம். ஆனால், சிலர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சிலர் திட்டமிட்டு, சில காரியங்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்றால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும் பட வேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியை பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலே சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE