வாஷிங்டன்: தலிபான் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு விரைவில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். தலிபான்களுக்கு பயந்து அங்கிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல ஏராளமானோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களில் ஏராளமானோர் அடித்துப் பிடித்து ஏறினர். இது தொடர்பான காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பல நாடுகளும் ஆப்கன் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் தலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‛அமெரிக்க சட்டங்களின்படி தலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆபத்தான அமைப்புகள் என்ற கொள்கையின் கீழ் பேஸ்புக் சேவைகள் தடை, தலிபான் ஆதரவாக செயல்படுவோரின் பேஸ்புக் கணக்குகளும், பதிவுகளும் நீக்கும் பணியை துவங்கி இருக்கிறோம்.' எனக் கூறியுள்ளது.