புதுடில்லி: மூன்றாம் அலை கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், கோவிட் பரிசோதனைகளுக்கான துரித ஆன்டிஜென் கருவிகளை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் கூடுதல் செயலர் அமித் யாதவ் நேற்று (ஆக., 16) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கோவிட் துரித ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளுக்கான ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி தற்போது கட்டுப்பாடுகளின்றி ஏற்றுமதி செய்யப்படும் கோவிட் பரிசோதனை கருவிகளுக்கு தடை விழுந்துள்ளது. அத்தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் டெல்டா வகை வைரஸால் கோவிட் 2-ம் அலை ஏற்பட்டது. அதில் பலரும் தீவிர கோவிட் தொற்றுக்கு ஆளானார்கள்.

இளம் வயதினருக்கும் மூச்சுத்திணறல், ரத்த ஆக்சிஜன் அளவு குறைந்தது போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் பின் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இருப்பினும் மூன்றாம் அலை குறித்த அச்சம் நிபுணர்களிடையே உள்ளது. தொற்று பாதிப்பில் எங்கேனும் திடீர் அதிகரிப்பு உள்ளதா என்பதை கண்காணிக்க துரித ஆன்டிஜென் பரிசோதனையை அதிக அளவு செய்யும் படி உத்தரவிட்டுள்ளனர். அதனால் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.