அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளை ஆதாரத்தோடு சொல்லுங்கள்!| Dinamalar

அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளை 'ஆதாரத்தோடு சொல்லுங்கள்!

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (100) | |
சென்னை:''அர்ச்சகர் நியமன விஷயத்தில் குறைகள் இருந்தால், ஆதாரத்தோடு சொல்லுங்கள்,'' என்கிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் நேற்று, இது தொடர்பாக நடந்த விவாதத்தில், ''அர்ச்சகர்கள் யாரையும் பணியிலிருந்து நீக்கி விட்டு, அந்த இடத்தில் புதிய நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்காவது நடந்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள்; அரசு நடவடிக்கை எடுக்கும்,''
அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகள்,ஆதாரத்தோடு சொல்லுங்கள்!

சென்னை:''அர்ச்சகர் நியமன விஷயத்தில் குறைகள் இருந்தால், ஆதாரத்தோடு சொல்லுங்கள்,'' என்கிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் நேற்று, இது தொடர்பாக நடந்த விவாதத்தில், ''அர்ச்சகர்கள் யாரையும் பணியிலிருந்து நீக்கி விட்டு, அந்த இடத்தில் புதிய நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்காவது நடந்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள்; அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என்றும் அவர் அறிவித்தார்.


சட்டசபையில் நடந்த விவாதம்:* தி.மு.க., - எழிலன்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை, முதல்வர் நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த சட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சிலர் சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புகின்றனர்.


* அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு:
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், இரண்டாம் நிலை அர்ச்சகர் பணிக்கு, 58 பேருக்கு பணி ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
திருச்சி நாகநாத சுவாமி கோவிலில், ஒரு அர்ச்சகர் பணியிடம் காலியாக இருந்தது. அக்கோவில் அர்ச்சகர் முத்துக்குமார், மற்றொரு கோவிலிலும் அர்ச்சகராக உள்ளார். எனவே, நாகநாத சுவாமி கோவிலில் காலியாக இருந்த பணியிடத்துக்கு, வேல்முருகன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதில், என்ன குறை உள்ளது?

அதேபோல், சிவகாசி வெங்கடாஜலபதி கோவில் பட்டாச்சாரியார் ரங்கநாத பட்டருக்கு, 70 வயதாகிறது. எனவே, ஆகம விதிகளை கற்ற சீனிவாசன் என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வைணவ பிராமணர். யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. வயது மூப்பு அடைந்தவர்களுக்கு, வேறு பணி வழங்குகிறோம். தேவையில்லாமல், சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புகின்றனர். இந்த மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டோம்.


ஆதாரத்தோடு சொன்னால்
* முதல்வர் ஸ்டாலின்:
அமைச்சர் தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளார். அது குறித்து, நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். ஈ.வெ.ரா., நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுக்க வேண்டும் என்பதற்காக, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என, கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
ஆனால், அது நடைமுறைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை வழங்கி இருக்கிறோம்.

அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, சில காரியங்களை செய்கின்றனர். அமைச்சர் பேசும் போது, 'சில ஊடகத்தில்' என சொன்னார். நான் ஊடகத்தினரை குறை சொல்ல மாட்டேன். ஆனால், அதை பயன்படுத்தி, சமூக வலைதளத்தில் சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
யாரையும் எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து, புதிதாக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்காவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை அசு நிச்சயமாக எடுக்கும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.எனவே, வேண்டுமென்றே அதை கொச்சைப்படுத்தி, அரசியலுக்காக அல்லது சமூக நீதியை பாழடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவர்.


* அமைச்சர் துரைமுருகன்:
மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை செய்துள்ளீர்கள். இதற்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும். முதல்வர், அற்புதமான சமுதாய சீர்திருத்ததை செய்துள்ளார். எதிர்ப்புகள் வரும். அதை தடந்தோள் கொண்டு தாங்கும் திறன் கொண்டவர் நீங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

'அர்ச்சகர்களுக்கு எதிரான அரசாக சித்தரிக்க முயற்சி!'

சட்டசபை நிகழ்ச்சிக்கு முன், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
அறநிலையத் துறை கோவில்களில், அர்ச்சகர் நிலை - ௨ பணியிடங்களுக்கு, முறையாக தேர்வு நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஒரு சிலர், விஷமத்தனமான பிரசாரங்களை செய்கின்றனர்.


அடுத்த தலைமுறையை, இறை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, 35 வயதிற்கு உட்பட்ட, ஆகம விதிகளை முறையாக கற்றவர்களை, பணி அமர்த்தி உள்ளோம். கோவிலில் இருந்து பட்டச்சாரியார்களை, அர்ச்சகர்களையோ, வெளியில் அனுப்பும் திட்டம் இல்லை. ஒரு சிலர் வேண்டுமென்றே, அர்ச்சகர்களுக்கு எதிரான அரசாக, சித்தரிக்க நினைக்கின்றனர்.
முதல்வர் எடுக்கும் சீர்திருத்த நடவடிக்கைக்கு, பொது நல விரும்பிகள், ஆதரவு தர வேண்டும்.

தமிழக அரசு மிரட்டலுக்கு அஞ்சாது. அரசியல் சட்டத்தை எங்கும் மீறவில்லை.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, கருணாநிதி பாடுபட்டார். அது தவறு என்றால், அதே தவறை ஸ்டாலின் செய்வார். அறநிலையத் துறையில், நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளன; படிப்படியாக நிரப்பப்படும். கடந்த ஆட்சியாளர்கள், 2019ல், 'ஐந்து ஆண்டு பணியில் இருந்தவர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என, அறிவித்தனர்; நிறைவேற்றவில்லை.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், அவர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என்றார். விரைவில், அவர்களுக்கு பணி நிரந்தர ஆணையை, முதல்வர் வழங்குவார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X