மதுரை: 'மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, 36 மாதங்களில் நிறைவு செய்யப்படும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை தெரிவித்தது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும். 'அதற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'மதுரை மற்றும் பிற மாநிலங்களில், சில இடங்களில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு ஒரே காலகட்டத்தில்ஒப்புதல் அளித்தது.
அம்மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
'எய்ம்ஸ் விவகாரத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடும் நிலை உள்ளது.'தோப்பூரில் 36 மாதங்களுக்குள் எய்ம்ஸ் கட்டுமானப் பணி நிறைவு செய்யப்படும்' என, இந்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவிக்கிறது' என்றது. இதேபோல, 'கட்டுமானம் முடியும் வரை, தற்காலிக வளாகத்தில் எய்ம்சை துவக்க வேண்டும். 'வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை துவக்கி, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்' என, மற்றொரு மனு
தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு, 'தமிழக அரசுத் தரப்பில் செப்., 13ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றது.