கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதன்பின், மாணவர்களும், ஆசிரியர்களும் களத்தில் இறங்கி, பள்ளி வளாகத்தில், இயற்கை வகை கீரை, காய், கனிகள் தோட்டம், பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டனர்.
பள்ளி வளாகத்தில் இருந்து பறிக்கப்படும் கீரை, காய்களை, தினசரி சத்துணவில் பயன் படுத்தி வந்தனர்.கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கூடம் முடங்கிய போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் முடங்காமல், அங்கிருந்து தோட்டத்தை முறையாக பராமரித்து வருகின்றனர்.
தோட்டக்கலை, பாரம்பரிய மரங்களின் பலன்கள் மீது, மாணவர்கள் மத்தியில், ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்தந்த மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்த மரத்தின் வகை, மருத்துவ பயன்கள் இடம் பெற்றுள்ளன.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் கூறுகையில், ''மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை பராமரிப்பு, பாரம்பரிய மரங்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தேன். ''எதிர்பார்த்ததை விட மாணவர்கள் மிகுந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்,'' என, தெரிவித்தார்.