நீதிபதியை தரக்குறைவாக பேசிய நெல்லை கண்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன், தமிழக அட்வகேட் ஜெனரலுக்கு மனு அனுப்பி, அதை பதிவு செய்ய கோரியுள்ளார்.
அஸ்வத்தாமன் கூறியதாவது:
நெல்லை கண்ணன், சிரிக்க சிரிக்க பேச கூடியவர். அவ்வப்போது, காங்கிரஸ் மற்றும் பொது நல அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் பேச, பணம் பெற்று செல்வார். கூட்டத்தில் இருப்போரை, சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பேசுவார். அவர் யாரை பற்றி பேசினாலும், அதில் கேலியும், கிண்டலும் இருக்கும். அத்துடன் கேவலமாக பேசுவதையும் வாடிக்கையாக்கி இருக்கிறார்.அப்படித் தான், சில மாதங்களுக்கு முன், பிரதமர் மோடி பற்றி பேசியவர், 'அவரின் சோலியை முடிக்க வேண்டும்' என்றார்.
நெல்லை பாஷையில், 'சோலி முடிப்பது' என்றால், தீர்த்து கட்ட வேண்டும் என்பது அர்த்தம். அதாவது, கொலை செய்ய வேண்டும். இதையடுத்து, அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; பின், ஜாமினில் வெளி வந்து சில காலம் அமைதியாக இருந்தார். மீண்டும் பொது கூட்ட மேடைகளில் பேச துவங்கியுள்ளார்.
கடந்த மாதம் 8ம் தேதி, நெல்லை, பாளையங்கோட்டையில் நடந்த, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா கூட்டத்தில், காங்., சார்பில் பேசினார்.
அப்போது தான், நடிகர் விஜய், வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி செலுத்தாது தொடர்பான வழக்கு குறித்து விமர்சித்தார்.
![]()
|
அவரது பேச்சு:
'இந்த சுப்பிரமணியன்னு ஒரு ஜட்ஜ் இருக்கான் பார்த்தீங்களா... மெனக்கெட்டு வந்து, விஜய் பயல அசிங்கப்படுத்தி இருக்கானே அவன். ஜோசப் விஜய்னு சொல்லியிருக்கான். அவன் என்னய்யா தப்பு பண்ணிட்டான்? நீ ரியல் ஹீரோவா இருங்கற; நீ ரியல் ஜட்ஜாவா இருக்குறயா? மூடுல நீ...'இப்படி பேசினது முழுக்க முழுக்க, நீதிமன்ற அவமதிப்பாகும். நெல்லை கண்ணன், நடிகர் விஜய்க்கு ஆதரவா என்ன வேணும்னாலும் பேசலாம். அதுக்காக ஒரு நீதிபதியை, அவன், இவன் என, எந்த நாகரிகமும் இல்லாமல், பொது வெளியில் பேசினால், அதை வழக்கறிஞர் சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி அனுமதிக்க முடியும்?
அதுமட்டுமல்ல; நீதிபதி தன் தீர்ப்பின், ஒவ்வொரு எழுத்திலும் தன் சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் விஜய், நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்குக் கேட்டு, கோர்ட்டை நாடியதில், எந்தத் தவறும் இல்லை. ஆனால், தான் ஒரு நடிகன் என்பதையும், தன் பெயர் விஜய் என்பதையும் மறைத்திருக்கிறார். மனுவிலேயே ஜோசப் விஜய் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்.
இதை குறிப்பிட்டு தான், தீர்ப்பு எழுதி இருக்கிறார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். அதேபோல, வரி செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு, 'வரி செலுத்துவது, அரசுக்கு கொடுக்கும் நன்கொடை அல்ல; ஒவ்வொரு தனி மனிதனின் கடமை' என்று குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால், நீதிமன்றத்தின் செயல்பாடு மற்றும் நீதிபதியின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பிப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
அதனால், நெல்லை கண்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க, தமிழக அட்வகேட் ஜெனரலிடம் மனு கொடுத்துள்ளேன்.
அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, நெல்லை கண்ணனுக்கு அவர், 'நோட்டீஸ்' அனுப்புவார்; விசாரணை நடக்கும். பின், அதன் அடிப்படையில், உயர் நீதிமன்றத்துக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப் பரிந்துரைப்பார். குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.
இனி, நெல்லை கண்ணன் தப்ப முடியாது. நான் கொடுத்திருக்கும் மனுவை விசாரித்து, கோர்ட்டுக்கு பரிந்துரை செய்வதை, அட்வகேட் ஜெனரல் தாமதப்படுத்தலாம்; வேறு எதுவும் செய்ய முடியாது.
அதற்குள், நீதிமன்றம் நினைத்தால், இதை தானாகவே முன்வந்து, வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தி தண்டனை தர வாய்ப்புள்ளது.இவ்வாறு, அஸ்வத்தாமன் கூறினார்.
'வாயை அடைக்கும் முயற்சி!'
-என் உடல் நிலை மோசமா இருக்கு; பேச முடியாம இருக்கேன். சில நாட்களுக்கு முன், சங்கரய்யா நுாற்றாண்டு நிகழ்ச்சிக்கு போயிருந்தப்ப, வேடிக்கையா சில விஷயங்களை பேசினேன். நடிகர் விஜய் சம்பந்தமாவும் பேசினேன். அதுவும் சிந்திக்க பேசப்பட்டது தான். உள்நோக்கம் எதுவும் இல்லை. எல்லாரும் பொது வெளியில் பரபரப்பா பேசிய விஷயத்தைத் தான் பேசினேன்.
இதில், நீதிமன்ற அவமதிப்பு எதுவும் கிடையாது. பேசுகிறவர்களின் வாயை அடைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, சிலர் இப்படி திரித்து, சில காரியங்களை செய்கின்றனர். அது, ஜனநாயக
நாட்டில் எடுபடாது. -- நெல்லை கண்ணன், பேச்சாளர், காங்கிரஸ் கட்சி. - நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE