டேராடூன்: உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் தங்களின் முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜய் கொத்ரியாலை, ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. டில்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்துக்கு அடுத்தபடியாக உத்தரகண்டிலும் கவனம் செலுத்தி வருகிறது. சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.,வுக்கு, காங்கிரசை விட ஆம் ஆத்மி கட்சி தான் சவாலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உத்தரகண்ட் வந்தார். டேராடூனில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உத்தரகண்டில் காங்கிரசும், பா.ஜ.,வும் மாறி மாறி ஆட்சி அமைத்து மாநிலத்தை கொள்ளையடித்து விட்டன. இதனால் அரசியல் கலப்பற்ற ஒருவர் முதல்வராக வேண்டும் என, மாநில மக்கள் விரும்புவது, அவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்தது. இதையடுத்து உத்தரகண்ட் முதல்வர் வேட்பாளராக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜய் கொத்ரியாலை, ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்துள்ளது. இவர் சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். உத்தரகண்டில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஹிந்துக்களின் சர்வதேச ஆன்மிக மையமாக உத்தரகண்ட் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.