சென்னை: ‛‛கோவைக்கு மட்டுமல்ல; மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்,'' என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உறுதியளித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 13ம் தேதி நிதியமைச்சர் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 14ம் தேதி உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் சட்டசபை கூடியது.
அப்போது, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்ததாவது: மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் நிதியுதவி பெற்றுத்தான் நிறைவேற்ற முடியும். அப்படித்தான் இதுவரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோதும் மெட்ரோ ரயில் குறித்து வலியுறுத்தினேன். அதன் அடிப்படையில் தான் இதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரவும் நிச்சயம் அழுத்தம் கொடுப்போம். கோவைக்கு மட்டுமல்ல மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அறிவித்திருக்கிறோம். எங்கெங்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதோ அங்கு நிச்சயம் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு ஸ்டாலின் பதிலளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE