இது ஒன்றும் வகுப்பறை அல்ல: தியாகராஜனுக்கு வானதி பதிலடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது ஒன்றும் வகுப்பறை அல்ல: தியாகராஜனுக்கு வானதி பதிலடி

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021
Share
பா.ஜ., - வானதி சீனிவாசன்: சமீப காலமாக மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்கிறீர்கள். ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசனையை மாற்ற முடியாது. அமைச்சர் தியாகராஜன்: ரோஜாப்பூ மல்லிகையாகும் என நாங்கள் கூறவில்லை. மத்திய அரசின் வரி மற்றும் ஏனைய அதிகாரத்தை எதிர்த்து பேசிய முதல் நபர், நரேந்திர மோடி. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, 'ஜி.எஸ்.டி., வரி, மாநில உரிமையை

பா.ஜ., - வானதி சீனிவாசன்: சமீப காலமாக மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்கிறீர்கள். ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசனையை மாற்ற முடியாது.

அமைச்சர் தியாகராஜன்: ரோஜாப்பூ மல்லிகையாகும் என நாங்கள் கூறவில்லை. மத்திய அரசின் வரி மற்றும் ஏனைய அதிகாரத்தை எதிர்த்து பேசிய முதல் நபர், நரேந்திர மோடி. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, 'ஜி.எஸ்.டி., வரி, மாநில உரிமையை பறிக்கும்' என்றார்.எங்கள் கொள்கை, ஒரே கொள்கை தான். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒரே கொள்கை தான்; அது மாறாது. பலருக்கு அப்படி இல்லை.

வானதி சீனிவாசன்: மத்திய அரசின் வரி விகிதத்தை தாண்டி, மாநில அரசு அதிக நிதி பெற்றுள்ளது. 2010ல் தமிழகத்துக்கு 928.3 கோடி ரூபாய் கிடைத்தது. 2021ல் 10 ஆயிரத்து 389 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமைச்சர் தியாகராஜன்: ரூபாய் மதிப்பை ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில் பண மதிப்பு மாறிக் கொண்டே இருக்கும். எனவே, சதவீதம் அடிப்படையில் பேசுங்கள்; ஒப்பிட்டு பார்க்க சரியாக இருக்கும்.இவர், கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வாக வந்துள்ளாரா அல்லது அரசியல் கட்சி பாதுகாவலராக வந்துள்ளாரா அல்லது மத்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ளாரா? தொகுதி குறித்து பேசாமல், மத்திய அரசை பாதுகாப்பது குறித்து பேசுகிறார்.

வானதி சீனிவாசன்: கற்றுக் கொண்டதை கற்றுக் கொடுப்பதற்கு, சட்டசபை ஒன்றும் வகுப்பறை அல்ல. தன்னுடைய கண்டுபிடிப்புகளை நிறுவ, இது அறிவியல் ஆய்வகமும் அல்ல. கடந்த ஆண்டுகளில், எந்தெந்த வழிகளில் எந்தெந்த திட்டங்கள் வழியே, தமிழகத்துக்கு நிதியுதவி வந்தது என்ற தகவலை அளிக்கிறேன். சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக, 3,500 கிலோ மீட்டர் துார சாலைகளுக்கு, 1.03 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

அமைச்சர் தியாகராஜன்: வழங்கப் போகிறோம் எனக் கூறி உள்ளனர். மத்திய நிதி அமைச்சர், 'தமிழக அரசு, பெட்ரோல் லிட்டருக்கு ௩ ரூபாய் குறைப்பது சூழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். 'அவர்கள் 7 ரூபாய் ஏற்றிவிட்டு 3 ரூபாய் குறைத்துள்ளனர்' என தெரிவித்து உள்ளார். நாங்கள் ஏற்றவில்லை. கடந்த ஆட்சியில் ஏற்றினர்; நாங்கள் குறைத்துள்ளோம்.

இது சூழ்ச்சி அல்ல; எங்கள் நேர்மை. மத்திய அரசு, ஏழு ஆண்டுகளில் ஒரு முறையாவது வரி குறைத்துள்ளதா? பெட்ரோல் ஏழு மடங்கு, டீசல் 10 மடங்கு விலையை உயர்த்தி உள்ளது.

வானதி சீனிவாசன்: இதற்கு பதில் அளித்தால் கால தாமதம் ஏற்படும். எனவே, மீண்டும் வாய்ப்பு வரும்போது பதில் அளிக்கிறேன். கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ., கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இல்லாததால், தமிழகம் தலை நிமிர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

அமைச்சர் வேலு: சகோதரி, புதிய உறுப்பினர். பொதுவாக சட்டசபையில் ஒரு உறுப்பினர் குறித்து, மற்றொரு உறுப்பினர் பேசக் கூடாது என்பது விதி. ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என்பதால் அது குறித்து பேச வேண்டாம்.

எம்.எல்.ஏ., பேச்சால் சிரிப்பலை!

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் பேசினார். அவர், பேச்சை துவக்கியபோது, ''நான் பேசுகையில், அமைச்சர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ, ஏதேனும் விஷயத்தில் விளக்கம் தேவைப்பட்டாலோ, நான் பேசி முடித்த பின் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என, சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு பதில் அளித்த சபா

நாயகர் அப்பாவு, ''சட்டசபை மரபுப்படி, தேவைப்படும் நேரங்களில், தேவையான விளக்கங்களை அமைச்சர்கள் தருவர்,'' என்றார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், ''எத்தனையோ, 'டிவி' விவாதங்களில், நானும் நீங்களும் பங்கேற்றுள்ளோம். அதில், எத்தனையோ முறை நான் குறுக்கிட்டு பேசி உள்ளேன். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்,'' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.அதற்கு பதில் அளித்த சபாநாயகர், ''உங்கள் மீது கண்ணியமான எண்ணம் உண்டு. நான் உங்களை கண்ணியமாக பார்க்கிறேன். உங்களுக்கு உரிய மரியாதையை சபை தரும். நீங்கள் பேசுவதை பொறுத்து, அமைச்சர்கள் பதில் தருவர்,'' என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதம்

வானதி சீனிவாசன்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், வன விலங்கு - மனிதர்கள் மோதல் தொடர்கதையாக உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும்பயிர்களுக்கு, வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இதிலிருந்துவிவசாயிகளை காக்க, தனி திட்டத்தை வேளாண் பட்ஜெட்டில் சேர்த்திருக்கலாம்.

வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்: விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்றேன். பல மாவட்டங்களில், பன்றி, யானை, எருமை போன்றவற்றால் பிரச்னை எனக் கூறினர். இதற்கு நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் தியாகராஜன்: கடந்த ஏழு ஆண்டுகளாக, வன விலங்கு - மனிதர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. இதில் பல பிரச்னைகள் உள்ளன. முதல் பிரச்னை, நிலம் ஆக்கிரமிப்பு. மனிதர்கள் இல்லாத இடங்களில், மனிதர்கள் போய் விவசாயம் செய்வது, கட்டடம் கட்டி விலங்குகள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றனர். கோவையில் தெளிவான உதாரணம் உள்ளது. பெயர் கூறினால் அரசியலாகிவிடும். இதை எல்லாம் திருத்துவதற்காக, அரசு முயற்சி எடுக்கும். பட்ஜெட்டில் நில மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவோம். நில ஆக்கிரமிப்புகளை திரும்ப எடுக்க முயற்சிப்போம் என தெரிவித்துள்ளோம்.


'கன்னி பேச்சு என்ற வார்த்தை வேண்டாம்!'

வானதி சீனிவாசன்: சட்டசபையில், முதல் பேச்சை, 'கன்னி பேச்சு' என குறிப்பிடுகிறீர்கள். 'கன்னி' என்ற வார்த்தை பெண் இனத்தை குறிப்பது. முதல் பேச்சை, 'கன்னி பேச்சு' என குறிப்பிடாமல், அறிமுக பேச்சு, முதல் பேச்சு என குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்.
சபாநாயகர் அப்பாவு: உங்கள் ஆலோசனை ஏற்கப்படுகிறது.


கோவைக்கு முக்கியத்துவம் வேண்டும்!

வானதி சீனிவாசன்: கோவையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசுடன் கலந்தாலோசனை செய்யப்படும் என்ற அறிவிப்பு கவலை தருகிறது. சென்னையில் இரண்டாம், மூன்றாம் கட்டம் என அறிவித்து விட்டு, கோவையில் மட்டும் கலந்தாலோசிப்போம் என கூறுவது ஏன்?

சபாநாயகர்: மத்திய - மாநில அரசு இணைந்து தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.அமைச்சர் தியாகராஜன்: மெட்ரோ ரயில் உருவாக்க வேண்டும் என்றால், மத்திய அரசின் சட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து தான் செய்ய முடியும்.

வானதி சீனிவாசன்: இரண்டு அரசுகளும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் தான். மற்ற திட்டங்களை நிறைவேற்றுவோம் என கூறிவிட்டு, இந்த திட்டத்தில் மட்டும் ஆலோசிப்போம் என, கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முதல்வர் ஸ்டாலின்: மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன், மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுத் தான் நிறைவேற்ற முடியும். நேற்று முன்தினம் மத்திய அரசு, இரண்டாம் கட்டத்திற்கான அனுமதியை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது.
கோவைக்கு நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம்; கவலைப்பட வேண்டாம். கோவைக்கு மட்டுமல்ல. மதுரைக்கும் அறிவித்திருக்கிறோம்.

வானதி சீனிவாசன்: நன்றி. ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதை புறநகர் பகுதிக்கு மாற்றிவிட்டு அந்தப் பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும்.

முதல்வர்: கோவையில், தி.மு.க., அரசு செம்மொழி மாநாடு நடத்தியபோதே, கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். உங்களுடைய கோரிக்கை இந்த ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
வானதி சீனிவாசன்: முதல்வருக்கு நன்றி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X