சென்னை
: நேற்று அனைத்து கட்சியினரும் ஆச்சரியப்படும் வகையில், பா.ம.க.,
தலைவர் ஜி.கே.மணி, முதல்வர் ஸ்டாலினை, சட்டசபையில் புகழ்ந்து
தள்ளினார்.
பா.ம.க., - ஜி.கே.மணி: அரசு நல்லதை செய்தால்,
அதை பாராட்ட பா.ம.க., தயங்காது. காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்க அம்சம். வேளாண்
துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது, முதல் துவக்கம். நல்ல
துவக்கம், நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என்பதால், இதை வரவேற்கிறோம்.
பட்ஜெட்டிற்கு முன், அரசின் பொருளாதார நிலை குறித்த அறிக்கை
வெளியிட்டது, சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த
அரசு பொறுப்பேற்கும்போது, கடுமையான கொரோனா பாதிப்பு இருந்தது.
மனிதன் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற, நெருக்கடியான சூழல்
ஏற்பட்டது. மனிதர்களை காக்க, முதல்வர் எடுத்த முயற்சியை
பாராட்டுகிறேன். அவரது முயற்சியால், பல உயிர்கள்
காப்பற்றாப்பட்டு உள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது,
சிகிச்சை அளிப்பது, உயிரிழப்புகளை தடுப்பதில், முதல்வருக்கு முதல்
இடம் கிடைத்தது.வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கும் வகையில், பச்சைத் துண்டு அணிந்து சபைக்கு வந்துள்ளோம்.
41 ஆண்டுகள்
கிட்டத்தட்ட,
41 ஆண்டுகளாக, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு,
ராமதாஸ் போராடி வந்தார். முதல்வரை சந்தித்து, 10.5 சதவீத
இடஒதுக்கீட்டை வழங்க கோரிக்கை வைத்தோம். நல்ல முடிவு
அறிவிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை, அவர்
நிறைவேற்றியுள்ளார். 'நன்றி மறவாதவன் மனிதன்' என்ற
அடிப்படையில், நெஞ்சார முதல்வரை பாராட்டுகிறேன்.
'எதிர்க்கட்சி
எம்.எல்.ஏ.,க்கள் மனம் புண்படும்படி பேசக் கூடாது; கண்ணியத்துடன்
நடக்க வேண்டும்' என முதல்வர் கூறியதாக, உதயநிதி பேசினார். 'இது நம்
அரசு' என்று, முதல்வர் குறிப்பிட்டார்; இது, எல்லாரையும்
அரவணைத்து செல்லும் உயர்ந்த மனப்பான்மையை காட்டுகிறது.
நல்ல மனம்
நல்ல
மனம் தான் ஆட்சியாளர்களுக்கு தகுதியாக இருக்கும். இந்த பண்பை,
முதல்வர் எடுத்துக்காட்டி உள்ளார். வேளாண் பட்ஜெட் வாயிலாக,
பா.ம.க.,வின் 16 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு
காரணமாக இருந்த முதல்வருக்கு, சாதாரணமான பாராட்டு அல்ல; 'சபாஷ்
சபாஷ்' என்று பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.