புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்; ஸ்திரத்தன்மையை ஆராய்கிறது ஐ.ஐ.டி.,| Dinamalar

தமிழ்நாடு

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்; ஸ்திரத்தன்மையை ஆராய்கிறது ஐ.ஐ.டி.,

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (2)
Share
புளியந்தோப்பு : ''புளியந்தோப்பு, கு.மா.வா., கட்டடத்தின் ஸ்திரத்தன்மை ஆராயும் பணி, சென்னை ஐ.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.கடந்தாண்டு பயனாளி களிடம் ஒப்படைக்கப்பட்ட புளியந்தோப்பு, கோ.பி.பார்க் குடிசை மாற்று வாரிய புது கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள்
 புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்; ஸ்திரத்தன்மையை ஆராய்கிறது ஐ.ஐ.டி.,

புளியந்தோப்பு : ''புளியந்தோப்பு, கு.மா.வா., கட்டடத்தின் ஸ்திரத்தன்மை ஆராயும் பணி, சென்னை ஐ.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

கடந்தாண்டு பயனாளி களிடம் ஒப்படைக்கப்பட்ட புளியந்தோப்பு, கோ.பி.பார்க் குடிசை மாற்று வாரிய புது கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.


உறுதி


இதனால், கட்டட ஸ்திரத்தன்மை கேள்விக்குறியானது. மேலும் சிமென்ட் காரைகள் விழ ஆரம்பித்ததால் குடியிருப்புவாசிகள் பீதியடைந்தனர். இது தொடர்பாக, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று ஊரக தொழில் துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின் அமைச்சர் தா.மோ.அன்பசரன் கூறியதாவது:புளியந்தோப்பு, கே.பி.பார்க் கட்டடத்தை, 2019ல் இருந்து ஒன்றரை ஆண்டுகளாக, சென்னை மாநகராட்சி 'கொரோனா' வார்டாக பயன்படுத்தி வந்தது. மழையிலும், வெயிலிலும் அவதிப்படுவதால், கட்டடத்தில் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு பயனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து நான், அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ., பரந்தாமன் மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தோம். அப்போது, மின் துாக்கிகள் செயல்படாமல் இருந்தன, சில குடிநீர் குழாய்கள், கழிவு நீர் கால்வாய்கள் உடைந்திருப்பதும் தெரியவந்தது.இந்த பிரச்னைகளை சரிசெய்து, ஆடி மாதம் நிறைவடைந்தப்பின், குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்போது மக்களுக்கு உறுதியளித்தோம்.

ஆனால், அதற்குள் பலர் அனுமதியின்றி குடியேறி விட்டனர். இந்நிலையில் தான், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விட்டது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அதை சரிசெய்து வருகிறோம். கட்டடத்தின் ஸ்திரன்மை தொடர்பாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.


நடவடிக்கை


இதனால், அதன் ஸ்திரத்தன்மையை ஆராயும் பொறுப்பை, ஐ.ஐ.டி., வசம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் அளிக்கும் ஆய்வின் முடிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இதில் இரண்டாவது கட்டமாக அமைக்கப்பட்ட, 1,056 வீடுகள் கொண்ட கட்டடத்தில், கூவம் கரையோர மக்கள் குடியமர்த்தப்பட்டனர். அதற்கான தொகையை கூவம் அறக்கட்டளை செலுத்திவிட்டது.

ஆனால் முதற்கட்டடமாக அமைக்கப்பட்ட, இந்த, 846 வீடுகள் பயனாளிகள் பங்களிப்போடு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு 1.5 லட்சம் ரூபாய்; மாநில அரசு, 7 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டது.பயனாளிகள் பங்களிப்பாக 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதை கட்ட விரும்பாத சிலரால், துாண்டிவிடப்பட்ட சம்பவமாக கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X