புதுடில்லி: டிமார்ட் சூப்பர்மார்கெட் கடைகளின் உரிமையாளர் ராதகிஷன் தமானி சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தமானி 98-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில், அவர் 117-வது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசிம் பிரேம்ஜி, பல்லோன்ஜி மிஸ்ரி, ஷிவ் நாடார், லட்சுமி மிட்டல் ஆகியோரும் உலகின் நூறு பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்தியர்கள் ஆவர்.

மும்பையில் மார்வாடி குடும்பத்தில் பிறந்த தமானி, அங்கு ஒற்றை அறை கொண்ட வீட்டில் வளர்ந்தார். மும்பை பல்கலையில் வணிகவியல் படிப்பில் சேர்ந்தவர், ஒர் ஆண்டுக்கு பின் படிப்பைப் பாதியிலேயே நிறுதிவிட்டார். பங்குச்சந்தைகள் இயங்கும் தலால் தெருவில் வேலைப் பார்த்த அவரது தந்தை இறந்ததால், தனது பால் பியரிங் தொழிலை விட்டுவிட்டு பங்குச்சந்தை புரோக்கர் மற்றும் முதலீட்டாளர் ஆனார். 2000-த்தில் பங்குச்சந்தை தொழிலையும் விட்டுவிட்டு டிமார்ட் எனும் பெயரில் சூப்பர்மார்கெட் தொழிலில் இறங்கினார். அதில் டி என்பது தமானியை குறிக்கும்.
2002-ல் முதல் டிமார்ட் தொடங்கப்பட்டது. 2010-ல் அது 25 கடையாக வளர்ந்தது. அதன் பிறகு நிறுவனம் மேலும் வேகமெடுத்தது. 2017-ல் அவென்யூ சூப்பர்மார்ட் என்ற பெயரில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2020-ல் 1.2 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நான்காவது பெரிய பணக்காரர் ஆனார். பங்குச்சந்தையில் பணியாற்றிய போது ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுக்கு பங்கு வர்த்தக உத்திகளை கற்றுக்கொடுத்தவர். ஊடக வெளிச்சத்தை விரும்பாத இவர் அரிதாகவே பேட்டிகளை தந்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE