ராமநாதபுரம்: ஊர் தலைவர்களை ஆபாசமாக பேசிய இளைஞரின், 'வாட்ஸ் ஆப்' ஆடியோவை, ஊருக்கே ஒலிபரப்பி அந்த இளைஞருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி, பால்கரை கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன.ஊரில் குடிநீருக்கான மரைக்காயர் ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற, ஊர் தலைவர் கருப்பையா தலைமையில், ஊர் மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. குழு அமைத்து ஆக்கிரமிப்பை அகற்ற கூட்டத்தில் முடிவானது. இதன்படி, சில நாட்களுக்கு முன், ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதில், அதே ஊரைச் சேர்ந்த, துபாயில் வேலை செய்யும் முத்துகுமார் வசம் இருந்த இடமும் அளக்கப்பட்டது.

இதை, குடும்பத்தினர் மூலம் அறிந்த முத்துகுமார், ஊர் பிரமுகர்களை ஆபாசமாக பேசி, 'வாட்ஸ்- ஆப்'பில் 'ஆடியோ'க்களாக அனுப்பினார். இந்த பேச்சு பல்வேறு குழுக்களில் பரவியது. அந்த பேச்சை பதிவு செய்து, எஸ்.பி., அலுவலகத்தில் கிராம பிரமுகர்கள் புகார் அளித்தனர்.ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, முத்துகுமாரின் பேச்சை ஒலிபெருக்கியில் கிராமத்தில் ஒலிபரப்பினர். முத்துகுமாருக்கு கிராமத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் டி.எஸ்.பி., ராஜாவிடம், இது குறித்து தெரிவிக்க கிராமத்தினர் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.