அபுதாபி: '‛ரத்தக் களறியை தடுக்கவும், காபூலில் பேரழிவு நிகழக்கூடாது என்பதற்காகவும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன்,'' என, முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கமளித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு பாதுகாப்பான வேறொரு நாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.
இந்நிலையில், முகநூல் விடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு அஷ்ரப் கனி உரையாற்றினார்.

அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி. தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கவே விரும்பினேன். தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. இது எங்கள் தோல்வி. தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். விரைவில் நாடு திரும்ப உத்தேசிக்கிறேன். நாட்டின் இறையாண்மைக்காக போராடுவேன்.
எனது உயிருக்கு ஆபத்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினர். இதனால் எனது விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினேன்.
மேலும், ரத்தக் களறியை தடுக்கவும், காபூலில் பேரழிவு நிகழக்கூடாது என்பதற்காகவும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் வன்முறை வெடித்திருக்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து நான் வெளியேறியபோது கார்கள் நிறைய பணம் மற்றும் பொருட்களை கொண்டு சென்றதாக கூறுவது பொய், ஆதாரமற்றவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.